அரசு அதிகாரி போல் நடித்து லட்சக்கணக்கில் பணம் மோசடி


அரசு அதிகாரி போல் நடித்து லட்சக்கணக்கில் பணம் மோசடி
x
தினத்தந்தி 11 Feb 2023 12:15 AM IST (Updated: 11 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

அரசு அதிகாரி போல் நடித்து லட்சக்கணக்கில் பணம் மோசடி

கோயம்புத்தூர்

கோவை, பிப்

வேலை வாங்கித்தருவதாக கூறி அரசு அதிகாரி போல்நடித்து பலரிடம் லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்த மதுரையை சேர்ந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

இந்த மோசடி சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

மகளிர் விடுதி

கோவை ஆர்.எஸ்.புரம் ஸ்ரீனிவாசன் ராகவன் தெருவில் ஒரு மகளிர் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதிக்கு கடந்த 3 வாரங்களுக்கு முன்பு ஒரு பெண் வந்தார். அவர் அங்கிருந்த விடுதி காப்பாளரிடம் தான், மதுரை மேலவடை பகுதியை சேர்ந்த ராமலட்சுமி (வயது 31) என்று கூறினார்.

அத்துடன் அவர் தான் வருமான வரித்துறையில் அதிகாரியாக வேலை செய்து வருவதாகவும், ஐ.ஏ.எஸ்.படிப்பதற்காக இங்குள்ள ஒரு மையத்தில் பயிற்சி பெற வந்து உள்ளதாகவும் கூறினார். அத்துடன் தான் வருமானவரித்துறை அதிகாரியாக இருப்பதற்கான ஆவணங்கள் சில வற்றையும் காட்டி உள்ளார்.

தனியார் நிறுவனத்தில் வேலை

அதை நம்பிய அந்த விடுதி காப்பாளர் ராமலட்சுமியை அங்கு தங்கி இருக்க அனுமதி வழங்கினார். அவர் அங்கு தங்கியதும் அந்த விடுதியில் ஏற்கனவே தங்கி இருக்கும் பெண்களிடம் மிகவும் சகஜமாக பேசினார். அத்துடன் அவர் வருமானவரி தொடர்பாக அடிக்கடி செல்போனில் பலரிடம் பேசி உள்ளார்.

இதையடுத்து அங்கு தங்கி இருந்த பெண்கள், அவர் வருமானவரித்துறையில்தான் வேலை செய்து வருவதாக நம்பினார்கள். மேலும் அவர் அங்கு இருந்தவர்களிடம் தனக்கு அரசு அதிகாரிகள் மட்டுமல்லாமல் தனியார் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் பலர் எனக்கு தெரிந்தவர்கள். யாருக்காவது வேலை வேண்டும் என்றால் சொல்லுங்கள் வாங்கித்தருகிறேன் என்று கூறி உள்ளார்.

கைது செய்தனர்

அதை நம்பி, அங்கு தங்கி இருக்கும் பெண் ஒருவர் ரூ.30 ஆயிரத்தை கொடுத்து உள்ளார். அத்துடன் அந்த விடுதியில் இருந்த 2 பெண்களிடம் மடிக்கணினியை வாங்கிவிட்டு அங்கிருந்து திடீரென்று மாயமானார். உடனே அந்த பெண்கள் ராமலட்சுமியின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

உடனே இது குறித்த பாதிக்கப்பட்ட பெண்கள், விடுதி வார்டனிடம் தெரிவித்தனர். உடனே அவர் இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதுடன், கோவையில் பதுங்கி இருந்த ராமலட்சுமியை கைது செய்தனர்.

மடிக்கணினிகள் பறிமுதல்

பின்னர் அவரிடம் இருந்து 2 மடிக்கணினிகள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து ராமலட்சுமியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியானது. அது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:-

கைதான ராமலட்சுமி மீது ஏராளமான மோசடி புகார் உள்ளது. இவர் பல்வேறு பகுதிகளுக்கு சென்று மகளிர் விடுதியில் முதலில் தங்குவார். அங்கு தான் அரசு அதிகாரி என்று அறிமுகப்படுத்துவதுடன், ஏதாவது ஒரு துறையில் உயர் பதவியில் வேலை செய்து வருவதாக கூறுவார்.

போலி நியமன ஆணை

மேலும் தனியார் நிறுவன முதலாளிகள் பலர் எனக்கு தெரியும் என்றுக்கூறி அங்கு தங்கும் பெண்களிடம் கூறுவார். பணம் கொடுத்தால் எவ்வளவு பெரிய நிறுவனத்திலும் எளிதாக வேலை வாங்கி விடலாம் என்று கூறி பெண்களை நம்ப வைப்பார். பின்னர் அவர்களிடம் பணத்தை பெற்றுவிட்டு அந்த நிறுவனத்தில் சேருவதற்காக அடையாள அட்டை மற்றும் போலியான நியமன ஆணையையும் கொடுப்பார்.

இவ்வாறு கோவையில் மட்டும் பலரிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்து உள்ளார். மதுரையில் ஒரு போலீஸ்காரரிடம் அவருடைய மகனுக்கு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.1½ லட்சம் மோசடி செய்து இருக்கிறார். இதுதவிர நெல்லை உள்ளிட்ட பகுதிகளிலும் மோசடி செய்து இருக்கிறார்.

இதற்கு கோவையை சேர்ந்த 2 பேர் உடந்தையாக இருந்து உள்ளனர். எனவே அவர்கள் யார்?, எத்தனை பேரிடம் இதுபோன்று எவ்வளவு பணம் மோசடி செய்யப்பட்டு இருக்கிறது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story