பரிசு விழுந்ததாக கூறி பண மோசடி; 3 பேர் கைது


பரிசு விழுந்ததாக கூறி பண மோசடி; 3 பேர் கைது
x

நெல்லையில் பரிசு விழுந்ததாக கூறி பண மோசடி செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் உடந்தையாக இருந்த செல்போன் கடைக்காரரையும் போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

நெல்லையில் பரிசு விழுந்ததாக கூறி பண மோசடி செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் உடந்தையாக இருந்த செல்போன் கடைக்காரரையும் போலீசார் கைது செய்தனர்.

பரிசு விழுந்ததாக பண மோசடி

நெல்லையை அடுத்த தாழையூத்து தென்கலம் பகுதியில் சோப்பு விற்பனைக்கு வந்த சிலர், ஒரு சோப்பு கம்பெனி பெயரில் சோப்பு வாங்கினால் குலுக்கல் முறையில் பரிசு வழங்குவோம் என்று கூறி பொதுமக்களிடம் பெயர் முகவரி மற்றும் செல்போன் எண்ணை பெற்றுக்கொண்டு சென்றனர். பின்னர் அவர்கள் சில நாட்கள் கழித்து சோப்பு நிறுவனத்தின் மேலாளர் பேசுவது போன்று செல்போனில் அழைத்து, 'உங்களுக்கு தங்க காசு, டி.வி., மோட்டார் சைக்கிள் பரிசு கிடைத்துள்ளது. அதனை அனுப்புவதற்கு வரியாக ரூ.36 ஆயிரத்து 500 செலுத்த வேண்டும்' என்று கூறினர்.

இதனை உண்மை என்று நம்பி பணத்தை அனுப்பிய பலரும் ஏமாற்றப்பட்டனர். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள், நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு வழங்கினர். இதுதொடர்பாக மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு ராஜூ, இன்ஸ்பெக்டர் ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ராஜரத்தினம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த மோசடியில் ஈடுபட்டதாக தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த காளீஸ்வரன், இசக்கிமுத்து, அய்யனார் ஆகிய 3 பேரை கடந்த 13-ந்தேதி கைது செய்தனர்.

செல்போன் கடைக்காரர்

மேலும் கைதான 3 பேரிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் இந்த மோசடியில் ஈடுபடுவதற்காக கடையநல்லூர் கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த செல்போன் கடைக்காரர் தங்கராஜிடம் செல்போன் சிம்கார்டு வாங்கி பயன்படுத்தியது தெரிய வந்தது.

மேலும் தங்கராஜ் தனது கடையில் செல்போன் சிம்கார்டு வாங்க வருகிறவர்களின் அடையாள அட்டை, புகைப்படத்தை பயன்படுத்தி, மோசடியாக 100-க்கும் மேற்பட்ட சிம்கார்டுகளை அதிக விலைக்கு விற்று பல லட்சம் ரூபாய் சம்பாதித்ததும் தெரிய வந்தது. இதையடுத்து தங்கராஜை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story