கல்வி உதவித்தொகை வாங்கி தருவதாக கூறி 4 மாணவிகளிடம் பணம் மோசடி


கல்வி உதவித்தொகை வாங்கி தருவதாக கூறி 4 மாணவிகளிடம் பணம் மோசடி
x
தினத்தந்தி 15 May 2023 12:15 AM IST (Updated: 15 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பண்ருட்டி அருகே கல்வி உதவித்தொகை வாங்கி தருவதாக கூறி அரசுப் பள்ளி மாணவிகள் 4 பேரிடம் ஆன்லைன் மூலம் பணம் மோசடியில் ஈடுபட்ட மர்ம நபர் குறித்து சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

கடலூர்

பண்ருட்டி

செல்போன் அழைப்பு

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள மாளிகைமேடு கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்த மாணவி ஒருவருக்கு செல்போன் அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய மர்ம நபர், அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்துள்ள மாணவிகளுக்கு ரூ.13 ஆயிரம் கல்வி உதவித்தொகை அரசு சார்பில் வழங்கப்பட உள்ளது.

ஆனால் இதை தாங்கள் பெறுவதற்கு உங்கள் கணக்கில் குறைந்த பட்ச இருப்பு தொகை ரூ.3,500 இருக்க வேண்டும். எனவே உங்கள் வங்கி கணக்கில் குறைந்த பட்ச இருப்புக்கான பணத்தை போடுங்கள், அப்போது தான் உங்களுக்கு ஒரு மணி நேரத்துக்குள் ரூ.13 ஆயிரம் வழங்கப்படும் என தெரிவித்தார்.

ரூ.14 ஆயிரம் அனுப்பினர்

இதை உண்மை என்று நம்பிய அந்த மாணவியின் தந்தை, அவரது செல்போனில் 'கூகுள் பே' மூலம் பணத்தை அனுப்பி வைத்தார். இதேபோல் அந்த மாணவியின் சக தோழிகள் 3 பேரும் கல்வி உதவித்தொகை பெற மர்மநபரின் செல்போன் எண்ணுக்கு தலா ரூ.3 ஆயிரத்து 500-ஐ கூகுள் பே மூலம் அனுப்பி வைத்தனர்.

ஆனால் பணத்தை அனுப்பி ஒரு மணி நேரம் அல்ல, பலமணி நேரம் காத்திருந்த பிறகும் மர்ம நபர் கூறிய கல்வி உதவித்தொகை மாணவிகளின் வங்கி கணக்குகளில் வந்து சேரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த மாணவிகள், மர்ம நபரின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது.

மாணவிகள் ஏமாற்றம்

இதன் பிறகே தாங்கள் ஏமாந்ததை அறிந்து மாணவிகள் மனவேதனை அடைந்தனர். ஆன்லைன் மூலம் கல்வி உதவித்தொகை வாங்கி தருவதாக கூறி மாணவிகளிடம் மர்ம நபர் ரூ.14 ஆயிரம் மோசடி செய்தது தெரியவந்தது.

பின்னர் இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஒரு மாணவியின் தந்தை பண்ருட்டி போலீஸ் நிலையத்திலும், கடலூர் சைபர் கிரைம் போலீசாரிடமும் புகார் கொடுத்தார். இதையடுத்து மாணவிகளிடம் ஆன்லைன் மூலம் பண மோசடி செய்த மர்ம நபர் குறித்து கடலூர் சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பரபரப்பு

மேலும் இது போன்று ஆன்லைன் மூலம் உதவித்தொகை, வேலை வாங்கி தருவதாகவோ அல்லது வேறு ஏதேனும் உதவி செய்து தருவதாக கூறும் மர்ம நபர்களை நம்பி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த மோசடி சம்பவம் பண்ருட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story