வீட்டுமனை தருவதாக கூறி 500 பேரிடம் ரூ.1 கோடி மோசடி
வீட்டுமனை தருவதாக கூறி 500 பேரிடம் ரூ.1 கோடி மோசடி செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம் காகுப்பம் கணபதி நகர் பகுதியை சேர்ந்தவர் முருகன் மனைவி சித்ரா (வயது 43). இவர் விழுப்புரம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் செய்தார். அதில், கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரை சேர்ந்த பரணிதரன், பாலாஜி, பார்த்தசாரதி, இளங்கோவன் ஆகிய 4 பேரும் சேர்ந்து கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பழமலை நகரில் ஜாலி சிட்டி, அபூர்வா கார்டன், ஏர்போர்ட் சிட்டி, சன் சிட்டி, சூப்பர் சிட்டி என்ற பெயர்களில் வீட்டுமனைகளை விற்பனை செய்து வந்தனர்.
ரூ.1 கோடி மோசடி
இவர்கள் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 500 பேர்களிடம் இருந்து மாதந்தோறும் பணம் வசூல் செய்தனர். இவ்வாறாக ரூ.1 கோடிக்கு மேல் பணத்தை பெற்று அதற்கான வீட்டுமனையை பத்திரப் பதிவு செய்து தராமல் காலம் தாழ்த்தி வந்தனர்.
பணத்தை கட்டிய பொதுமக்கள், பலமுறை அவர்களிடம் சென்று வீட்டுமனையை பத்திரப்பதிவு செய்து தருமாறும், இல்லையெனில் தாங்கள் கட்டிய பணத்தை திருப்பித்தருமாறும் வற்புறுத்தி கேட்டனர். ஆனால் அவர்கள் 4 பேரும் வீட்டுமனையை பத்திரப்பதிவு செய்து தராமலும், கட்டிய பணத்தை உரியவர்களுக்கு திருப்பித்தராமலும் ஏமாற்றி மோசடி செய்து விட்டனர். எனவே அவர்கள் 4 பேர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகாரில் கூறியிருந்தார்.
3 பேர் கைது
இதன் அடிப்படையில் பரணிதரன் உள்ளிட்ட 4 பேர் மீதும் போலீஸ் துணை சூப்பிரண்டு முருகன், இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி, சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் 4 பேரும் மோசடி செய்தது தெரியவந்தது.
இதையடுத்து பரணிதரன் (49), பாலாஜி (54), இளங்கோவன் (50) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள பார்த்தசாரதியை போலீசார் தேடி வருகின்றனர்.