மாணவிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்து ரூ.1 லட்சத்து 13 ஆயிரம் மோசடி


மாணவிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்து ரூ.1 லட்சத்து 13 ஆயிரம் மோசடி
x

புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் மாணவிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்து ரூ.1 லட்சத்து 13 ஆயிரம் மோசடி செய்த பேராசிரியை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை

மகளிர் கல்லூரி

புதுக்கோட்டையில் உள்ள கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் இளங்கலை வரலாறு பாடப்பிரிவு 2-ம் ஆண்டு மாணவிகளிடம் பருவத்தேர்வுக்கு கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடா்பாக கல்லூரி தரப்பில் இருந்து அந்த துறை பேராசிரியைகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கல்லூரி பேராசிரியை ஒருவர் தர்ணா போராட்டமும் நடத்தினார். வருவாய் கோட்டாட்சியர் தலைமையிலும் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் அத்துறையின் கவுரவ விரிவுரையாளரான நசீம் நிஷா பேகம், மாணவிகளிடம் கூடுதலாக கட்டணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

மோசடி வழக்குப்பதிவு

இதையடுத்து கல்லூரி முதல்வர் புவனேஸ்வரி புதுக்கோட்டை டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் நசீம் நிஷா பேகம், தனக்கு தெரியாமல் 73 மாணவிகளிடம் தலா ரூ.1,550 என கூடுதலாக கட்டணம் வசூலித்து ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 150 மோசடியில் ஈடுபட்டதாக தெரிவித்திருந்தார். அதன்பேரில் அவர் மீது மோசடி வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் நேற்று கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். ஆனால் அந்த ஆர்ப்பாட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்தனர்.

பணம் யாரிடம் உள்ளது?

இதற்கிடையில் மாணவிகளிடம் இந்த கட்டண மோசடி நடந்தது எப்படி என்பது குறித்து இந்திய மாணவர் சங்கத்தினரிடம் கேட்ட போது கூறுகையில், ''கல்லூரியில் 2021-2022-ம் ஆண்டுக்கான சிறப்பு கட்டணம் என்ற முறையில் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதில் 73 மாணவிகளிடமும் 2 பருவத்தேர்வுக்கு என தலா ரூ.1,550-ஐ பேராசிரியைகள் வசூலித்துள்ளனர். பொதுவாக பருவத்தேர்வு சிறப்பு கட்டணம் என ரூ.360 வசூலிப்பதாக கூறப்படுகிறது. ஆனால் கூடுதலாக வசூலிக்கப்பட்ட இந்த கட்டணத்திற்கு மாணவிகள் தரப்பில் இருந்து ரசீது கேட்டபோது தான் பிரச்சினை வெடித்தது.

வசூலிக்கப்பட்ட கட்டணம் துறைத்தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் துறைத்தலைவர் தன்னிடம் பணம் ஒப்படைக்கப்படவில்லை எனக் கூறிவிட்டார். தற்போது மாணவிகளிடம் வசூலிக்கப்பட்ட பணம் யாரிடம் உள்ளது என்பது மர்மமாக உள்ளது. இந்த மோசடியின் உண்மை நிலையை வெளிக்கொண்டு வர நாங்கள் போராட்டம் நடத்த உள்ளோம்'' என்றனர்.

விசாரணைக்கு பின் நடவடிக்கை

இதுகுறித்து போலீசாரிடம் கேட்டபோது, '' மாணவிகளிடம் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டது பேராசிரியை நசீம் நிஷா பேகம் என கல்லூரி முதல்வர் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பிரச்னை தொடர்பாக கல்லூரி தரப்பில் நடைபெற்ற விசாரணையின் போதும், வருவாய் கோட்டாட்சியர் விசாரணையிலும் அந்த பேராசிரியை பணம் வசூலித்தது தொடர்பாக ஆஜராகி எதுவும் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. இருப்பினும் முழுமையான விசாரணைக்கு பின் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றனர்.


Next Story