வங்கியில் கடன் வாங்கி தருவதாக ரூ.1 லட்சம் மோசடி தஞ்சை வாலிபர் கைது


வங்கியில் கடன் வாங்கி தருவதாக ரூ.1 லட்சம் மோசடி  தஞ்சை வாலிபர் கைது
x

வங்கியில் கடன் வாங்கி தருவதாக ரூ.1 லட்சம் மோசடி செய்த தஞ்சை வாலிபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை

வங்கியில் கடன்

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா அண்ணாபட்டியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 26). இவரது செல்போன் எண்ணுக்கு கடந்த மாதம் 14-ந் தேதி மர்ம ஆசாமி ஒருவர் பேசி உங்களுக்கு ஒரு தனியார் வங்கியில் ரூ.2½ லட்சம் கடன் பெற்று தருவதாகவும், அதற்கு கமிஷன் தொகையாக ரூ.1 லட்சத்திற்கு 4 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.10 ஆயிரம் கமிஷன் தர வேண்டும் என கேட்டுள்ளார். இதனை உண்மை என்று நம்பிய சதீஷ்குமார் அந்த ஆசாமியின் ஜிபே எண்ணிற்கு பல தவணைகளாக ரூ.5 ஆயிரத்து 150 செலுத்தியுள்ளார். ஆனால் நீண்ட நாட்கள் ஆனபின்பும் தனக்கு வங்கி கடன் கிடைக்காததால் சந்தேகம் அடைந்த சதீஷ்குமார் இதுகுறித்து புதுக்கோட்டை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

தஞ்சை வாலிபர் கைது

இதையடுத்து, சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் கவிதா இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் சம்பந்தப்பட்ட செல்போன் எண் தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகாவிற்குட்பட்ட திருமங்கலக்குடி கிராமத்தை சேர்ந்த ராஜா சோமு (36) என்பவருடையது என தெரிந்தது.

இவர் வங்கி கடன் வாங்கி தருவதாக சதீஷ்குமார் மட்டுமின்றி புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மேலும் பலரிடம் கடந்த 6 மாதங்களில் ரூ.1 லட்சம் வரை மோசடி செய்தது தெரியவந்தது. மேலும் இவை அனைத்தும் ஆன்லைன் பண பரிவர்த்தனை மூலம் நடந்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து ராஜா சோமுவை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story