இன்ஸ்டாகிராமில் ராணுவ வீரர் போல் பழகி ஆட்டோ டிரைவரிடம் ரூ.1½ லட்சம் மோசடி


இன்ஸ்டாகிராமில் ராணுவ வீரர் போல் பழகி ஆட்டோ டிரைவரிடம் ரூ.1½ லட்சம் மோசடி
x

ராணுவ வீரர் போல் நடித்து பணம் தருவதாக கூறி ராமநாதபுரம் ஆட்டோ டிரைவரிடம் ரூ.1½ லட்சம் மோசடி செய்தவர்கள் மீது சைபர்கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ராமநாதபுரம்


ராணுவ வீரர் போல் நடித்து பணம் தருவதாக கூறி ராமநாதபுரம் ஆட்டோ டிரைவரிடம் ரூ.1½ லட்சம் மோசடி செய்தவர்கள் மீது சைபர்கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ராணுவ உடையுடன்

ராமநாதபுரம் தையல்பாகம் தெற்குத்தெருவை சேர்ந்தவர் வீரமணிகண்டன் (வயது 35). சொந்தமாக ஆட்டோ வைத்து தொழில் செய்து வருகிறார். இவர் இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கி தனது செல்போனில் பார்த்து வந்துள்ளார். இந்தநிலையில் அவரின் இன்ஸ்டாகிராம் கணக்கிற்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதனை பார்த்த வீரமணிகண்டன் அந்த தகவல் அனுப்பிய நபருடன் நட்பாக இருந்து வந்துள்ளார். அப்போது அந்த நபர் சில நாட்கள் கடந்து தான் அமெரிக்காவை சேர்ந்தவர் என்றும், தற்போது சிரியா போரில் இருந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் ராணுவ உடையுடன் இருக்கும் புகைப்படத்தையும் அனுப்பி வைத்துள்ளார்.

மேலும், சிரியா போரில் பணியில் ஈடுபடுவதற்காக ஊதியமாக ரூ.50 ஆயிரம் டாலர் சம்பளம் கிடைக்கிறது. அதனை அமெரிக்காவிற்கு கொண்டு செல்ல முடியாது என்பதால் நம்பிக்கையான நபர் மூலம் இந்தியாவில் மாற்றி அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

ரூ.18 கோடி கமிஷன்

இந்த பணத்தினை பெற்று மாற்றி அனுப்புவதற்கு 3 சதவீதம் கமிஷனாக தருவதாகவும், ரூ.18 கோடி வரை கமிஷன் கிடைக்கும் என்பதால் நீங்கள்தான் எனது நம்பிக்கைக்கு உரியவராக தெரிகிறீர்கள் என்று தெரிவித்துள்ளார். தன்னை நம்பி ரூ.18 கோடி கமிஷன் கொடுக்கிறாரா என்று ஆசைப்பட்ட வீரமணிகண்டன் அவரின் சீருடை மற்றும் தகவலை பார்த்து பணத்தை பெற்றுக்கொள்ள சம்மதித்து இருக்கிறார்.

இதற்காக அவர் கேட்ட விவரங்களை தெரிவித்தநிலையில் அடையாளம் தெரியாத அந்த நபர் உங்களுக்கு பணமாக அனுப்பி வைத்துள்ளேன் என்று குறிப்பிட்டு பார்சல் ஒன்றின் படத்தினை அனுப்பி வைத்துள்ளார். சொன்னபடி பணத்தினை அனுப்பிவிட்டாரே நமக்கு இனி எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்று நம்பி காத்திருந்துள்ளார்.

போலீசில் புகார்

சில நாட்கள் கழித்து, நான் அனுப்பிய பணம் ஏர்போர்ட் பார்சல் பிரிவில் உள்ளதால் அதனை பெறுவதற்கான கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறி பணம் கேட்டுள்ளார். அந்த பணத்தை செலுத்திய நிலையில் அதிக பணம் என்பதால் வரி செலுத்த வேண்டும் அப்போதுதான் பணத்தினை பெற முடியும் என்று தொடர்ந்து பல்வேறு காரணங்களை கூறி பணம் செலுத்துமாறு கூறியுள்ளனர். இவ்வாறு வீரமணிகண்டனிடம் மொத்தமாக ரூ.1 லட்சத்து 60 ஆயிரத்தினை பெற்றுள்ளார்.

கடைசியாக மேலும் ரூ.3 லட்சம் செலுத்தினால்தான் பணத்தினை ரொக்கமாக பெற முடியும் என்று கூறியதால் சந்தேகம் அடைந்த வீரமணிகண்டன் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் கேட்டுள்ளார். அவர்கள் இதுபோன்று மோசடி பேர்வழிகள் தொடர்ந்து பணம்பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர் என்று கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வீரமணிகண்டன் இதுகுறித்து சைபர்கிரைம் போலீசில் புகார் செய்தார். இதுதொடர்பாக ராமநாதபுரம் சைபர்கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல்ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் திபாகர் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Related Tags :
Next Story