ஏ.டி.எம்.மில் நிரப்புவதற்காக வங்கியில் ரூ.1½ லட்சம் பெற்று மோசடி
கணபதியில் ஏ.டி.எம்.மில் நிரப்புவதற்காக வங்கியில் ரூ.1½ லட்சம் பெற்று மோசடி செய்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கணபதி
கோவை கணபதி பாரதிநகரை சேர்ந்தவர் அன்பரசு (வயது 42). இவர் ஏ.டி.எம்.மில் பணம் நிரப்பும் நிறுவனத்தில் மேலாளராக உள்ளார். இந்த நிலையில் அன்பரசு சரவணம்பட்டி போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
எங்கள் நிறுவனத்தில் பிரகாஷ் என்பவர் வேலை செய்து வந்தார். அவர் வங்கிகளுக்கு சென்று ஏ.டி.எம்.மில் நிரப்புவதற்காக பணத்தை வாங்கி வரும் வேலைகளை செய்து வந்தார். அவ்வாறு வாங்கி வரும் பணத்தை ஏ.டி.எம்.மில் நிரப்புவதற்கு ஊழியர்களுக்கு பிரித்துக் கொடுப்பது வழக்கம். இந்த நிலையில் நான் கணக்கு வழக்குகளை சரி பார்த்தபோது அதில் ரூ.1 லட்சத்து 42 ஆயிரம் குறைவாக இருந்தது. உடனே நான் இதுகுறித்து ஊழியர்களிடம் விசாரித்தேன்.
அப்போது பிரகாஷ் ரூ.1 லட்சத்து 42 ஆயிரத்தை மோசடி செய்ததை ஒப்புக்கொண்டார். பின்னர் அவர் அந்த பணத்தை திருப்பி தருவதாக கூறினார். ஆனால் இதுவரை அவர் அந்த பணத்தை திருப்பி தரவில்லை. எனவே அந்த பணத்தை அவரிடம் இருந்து பெற்று தரவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. இதன்பேரில் பிரகாஷ் மீது சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.