தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.12 லட்சம் மோசடி
கோவையில், சொகுசு கார் பரிசு விழுந்ததாக கூறி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.12 லட்சம் மோசடி செய்தது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை
கோவையில், சொகுசு கார் பரிசு விழுந்ததாக கூறி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.12 லட்சம் மோசடி செய்தது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த மோசடி குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தனியார் நிறுவன ஊழியர்
கோவை என்.எச். ரோடு பகுதியை சேர்ந்தவர் அப்துல் சமீது(வயது 62). பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் விற்பனை பிரிவில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு ஆன்லைனில் பொருட்கள் வாங்கினார். பின்னர் சிறிது நாட்கள் கழித்து அவருடைய செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது.
அதில் பேசிய நபர், நீங்கள் ஆன்லைன் மூலம் எங்கள் நிறுவனத்தில் பொருட்கள் வாங்கியதால், குலுக்கலில் உங்களுக்கு சொகுசு கார் பரிசாக விழுந்து உள்ளது. அதை பெற்றுக்கொள்ள உங்களுக்கு விருப்பமா? என்று கேட்டு உள்ளார்.
இன்ஸ்சூரன்ஸ், பதிவு கட்டணம்
அதை கேட்டு மகிழ்ச்சி அடைந்த அப்துல் சமீது, ஆம்.. அதை எப்படி பெற வேண்டும் என்று கேட்டார். அதற்கு மறுமுனையில் பேசிய நபர், உங்களுக்கு பரிசு விழுந்த காருக்கு இன்ஸ்சூரன்ஸ், பதிவு கட்டணம் ஆகியவை செலுத்த வேண்டும், அதை நீங்கள் கட்ட தயாரா? என்று கேட்டு உள்ளார்.
உடனே அப்துல் சமீது, அந்த கட்டணத்தை எப்படி செலுத்த வேண்டும் என்று கேட்டார். அதற்கு அவர், நாங்கள் ஒரு லிங்க் அனுப்பி வைக்கிறோம். அந்த லிங்க் மூலம் செலுத்தலாம் என்று கூறி உள்ளார். அதன்படி அந்த நபர் அனுப்பிய லிங்க் மூலம் முதலில் அப்துல் சமீது ரூ.50 ஆயிரம் அனுப்பினார்.
ரூ.12 லட்சம் மோசடி
பின்னர் சேவை கட்டணம், பிராசசிங் கட்டணம் செலுத்த வேண்டும் என்று கேட்டு உள்ளனர். அதையும் அப்துல் சமீது அனுப்பி வைத்து உள்ளார். இவ்வாறு தொடர்ந்து பணம் கேட்டுக்கொண்டே இருந்ததால், ஏன் இவ்வளவு தொகை என்று விசாரித்தபோது, உங்களுக்கு பரிசாக விழுந்த காரை உங்களிடம் கொடுக்கும்போது, நீங்கள் செலுத்திய பணம் அனைத்தையும் திரும்ப கொடுத்துவிடுவோம் என்று கூறி அவரை நம்ப வைத்துள்ளனர்.
இவ்வாறு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் கடந்த 3-ந் தேதி வரை அப்துல் சமீது 155 முறை மொத்தம் ரூ.12 லட்சம் அனுப்பி வைத்து உள்ளார். ஆனாலும் அவர்கள் அந்த காரை அவரிடம் கொடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்து விசாரித்தபோது, அந்த நபர் சரியாக பதில் அளிக்கவில்லை.
போலீசார் விசாரணை
அத்துடன் அந்த நபர் பேசிய செல்போன் எண் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அப்துல் சமீது, இதுகுறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.