இளம்பெண்ணிடம் ரூ.14 லட்சம் மோசடி


இளம்பெண்ணிடம் ரூ.14 லட்சம் மோசடி
x
தினத்தந்தி 16 April 2023 12:15 AM IST (Updated: 16 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பிரபல உணவக கிளை திறக்க அனுமதி வாங்கி தருவதாக கூறி கோவையில் இளம்பெண்ணிடம் ரூ.14 லட்சம் மோசடி நடைபெற்றுள்ளது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோயம்புத்தூர்

கோவை

பிரபல உணவக கிளை திறக்க அனுமதி வாங்கி தருவதாக கூறி கோவையில் இளம்பெண்ணிடம் ரூ.14 லட்சம் மோசடி நடைபெற்றுள்ளது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பிரபல உணவக கிளை

கோவை கோட்டைமேடு பகுதியை சேர்ந்த வெங்கிடுசாமி என்பவரது மகள் பிரியதர்ஷினி(வயது 23). இவர் வீட்டில் இருந்தபடி ஆன்லைன் மூலம் வேலை தேடி வந்தார். அப்போது பிரபல உணவக கிளை தொடங்க அனுமதி வாங்கி தரப்படும் என்றும், விருப்பம் இருந்தால் தொடர்பு கொள்ளுமாறும் ஆன்லைனில் வந்த தகவலை நம்பி, பிரியதர்ஷினி அதனை தொடர்பு கொண்டார். அந்த நிறுவனத்தின் பெயர் விவரங்கள் மற்றும் முத்திரையிட்ட கடிதங்களும் ஆன்லைனில் இருந்தது. இதைத்தொடர்ந்து அந்த நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறி செல்போனில் தொடர்பு கொண்ட சிலர், பிரியதர்ஷினியிடம் கோவையில் பிரபல உணவக கிளையை தொடங்க அனுமதி வாங்கி தருவதாகவும் உறுதி அளித்தனர். இதற்காக முன்வைப்பு தொகை வழங்க வேண்டும் என்று கூறி குறிப்பிட்ட வங்கி கணக்கு எண்ணை கொடுத்தனர். ஆரம்பத்தில் பிரியதர்ஷினி, அந்த வங்கி கணக்கில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை செலுத்தினார்.

ரூ.14 லட்சம் மோசடி

முதற்கட்டமாக பணம் வந்த பிறகு, கிளை அமைப்பதற்கான அனுமதி கடிதத்தை பிரியதர்ஷினியின் புகைப்படத்துடன் போலியாக தயார் செய்து, ஆன்லைன் மூலம் அனுப்பி வைத்து, இடம் தேர்வுக்கான செலவு தொகையை அனுப்புமாறு கேட்டுள்ளனர். இவ்வாறு படிப்படியாக பணம் அனுப்ப சொன்னதால் கடந்த பிப்ரவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை மொத்தம் ரூ.14 லட்சத்து 9 ஆயிரத்து 962-ஐ பிரிதர்ஷினி செலுத்தினார். இந்த பணம் வந்த பிறகு, பிரியதர்ஷினியை தொடர்பு கொள்வதை அவர்கள் நிறுத்திவிட்டனர். அதன்பின்னர்தான் மோசடி நடைபெற்று இருப்பதை பிரியதர்ஷினி உணர்ந்தார்.

வழக்குப்பதிவு

இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில் சைபர் கிரைம் போலீசார் மோசடி, போலி ஆவணங்களை பயன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் குறித்து சைபர் கிரைம் போலீசார் கூறும்போது, இதுபோன்ற மோசடி ஜார்க்கண்ட் மாநிலத்திலும் நடைபெற்று சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் தொடர்புடைய ஆசாமிகளா? என்று விசாரணை நடத்தி வருகிறோம். ஆன்லைன் மூலம் மோசடிகள் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். பிரபல நிறுவனங்களின் பெயர்களை பயன்படுத்தி மோசடி நடைபெறுகிறது. சம்பந்தப்பட்ட நிறுவனங்களை நேரில் அணுகி உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும். அதற்கு முன்பாக பணம் செலுத்தினால் மோசடி ஆசாமிகள் பணத்தை சுருட்டிக்கொண்டு மாயமாகிவிடுவார்கள் என்று தெரிவித்தனர்.

1 More update

Next Story