பெண்ணிடம் ரூ.18¼ லட்சம் மோசடி


பெண்ணிடம் ரூ.18¼ லட்சம் மோசடி
x
தினத்தந்தி 28 Jun 2023 1:15 AM IST (Updated: 28 Jun 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

பெண்ணிடம் ரூ.18¼ லட்சம் மோசடி

கோயம்புத்தூர்

கோவை, ஜூன்.28

அதிக கமிஷன் தருவதாக கூறி ஆன்லைன் முதலீட்டில் பெண்ணிடம் ரூ.18¼ லட்சம் மோசடி நடந்தது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இணையதள லிங்க்

கோவையை அடுத்த கோவைப்புதூரை சேர்ந்தவர் ஊர்மிளா (வயது 42). இவர் கோவை சைபர் கிரைம் போலீசில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

எனக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு உஸ்மா சர்மா என்ற பெயரில் வாட்ஸ் அப்பில் குறுந்தகவல் வந்தது. அந்த நபர், தான் சமூக வலைத்தள மார்க்கெட்டிங் நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதாகவும், பகுதி நேரமாக எனக்கு வேலை வாங்கி தருவதாகவும் கூறினார். மேலும் அவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்ந்தால் கமிஷன் கிடைக்கும் என்றும் கூறினார்.

இதையடுத்து அவர் என்னை அவர்களுடைய டெலிகிராம் என்ற சமூகவலைத்தள குழுவில் இணைத்து விட்டார். பின்னர் அவர், ஒரு இணையதள லிங்கை அனுப்பி அதில் உனது விவரங்களை பதிவு செய்தால் தான் கமிஷன் கிடைக்கும் என்று கூறினார்.

ரூ.18¼ லட்சம் மோசடி

அதை உண்மை என நம்பி நானும், அவர் சொன்னது போல் எனது விவரங்களை பதிவு செய்தேன். அப்போது முதற்கட்டமாக இன்ஸ்டா கிராம் பக்கத்தை பின்தொடர்ந்தற்காக ரூ.210 கமிஷனாக அனுப்பினார். இதையடுத்து நான் ஆன்லைனில் ரூ.1000 முதலீடு செய்தேன். அதற்கு கமிஷன் என கூறி ரூ.1,410 எனது வங்கி கணக்கிற்கு வந்தது.

உடனே நான் மேலும் ரூ.5 ஆயிரம் முதலீடு செய்தேன். அதற்காக எனக்கு ரூ.6,420 கமிஷனாக கிடைத்தது. இதைத்தொடர்ந்து சிறிது சிறிதாக மொத்தம் ரூ.18 லட்சத்து 30 ஆயிரம் வரை ஆன்லைனில் முதலீடு செய்து வந்தேன்.

பணத்தை மீட்க வேண்டும்

ஆனால் எனக்கு கமிஷன்தொகை ஏதும் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த நான் அவரை தொடர்புகொள்ள முயற்சி செய்தேன். ஆனால் அந்த நபரை தொடர்பு கொள்ள முடியவில்லை. எனவே என்னிடம் மோசடி செய்த நபரை கண்டுபிடித்து எனது பணத்தை மீட்டு தர வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார். அதன் பேரில் கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story