மூதாட்டியிடம் ரூ.2 கோடி மோசடி


மூதாட்டியிடம் ரூ.2 கோடி மோசடி
x
தினத்தந்தி 7 May 2023 1:00 AM IST (Updated: 7 May 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் மூதாட்டியிடம் ரூ.2 கோடி மோசடி செய்த பெண் உள்பட உறவினர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோயம்புத்தூர்

கோவை

கோவையில் மூதாட்டியிடம் ரூ.2 கோடி மோசடி செய்த பெண் உள்பட உறவினர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

இது குறித்து கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-

தொழில் அதிபரின் தாயார்

கோவையை அடுத்த இடிகரையை சேர்ந்தவர் ராமராஜ். இவருடைய மனைவி ரங்கநாயகி (வயது 70). இவருடைய மகன் நைஜீரியா நாட்டில் மோட்டார் பம்ப் உற்பத்தி உள்ளிட்ட தொழில் செய்து வருகிறார். இவர் வெளிநாட்டில் இருந்து தனது தாயாரின் வங்கி கணக்கிற்கு அவ்வப்போது பணம் அனுப்பியுள்ளார். அந்த பணத்தை ரங்கநாயகியின் சகோதரர் பாலகிருஷ்ணன் (71), அவருடைய மகள் கவிப்பிரியா (41), அவருடைய கணவர் ஆனந்த குமார் (49) ஆகியோர், ஏமாற்றும் நோக்கத்துடன், அதிக லாபம் பெற்றுத் தருவதாக கூறியும் ரங்கநாயகியிடம் வாங்கியுள்ளனர். இவ்வாறு அவர்கள் சுமார் ரூ.8 கோடி வரை ரங்கநாயகியிடம் இருந்து பெற்றுள்ளனர்.

ரூ.2 கோடி மோசடி

ஆனால் அவர்கள் 3 பேரும் லாபத்தொகை எதுவும் கொடுக்க வில்லை. இது பற்றி ரங்கநாயகி தொடர்ந்து கேட்டதால் அவர்கள் ரூ.6 கோடியை மட்டும் திருப்பி கொடுத்துள்ளார். ரூ.2 கோடியே 10 லட்சத்தை திருப்பி கொடுக்காமல் மோசடி செய்து உள்ளனர்.

இந்த நிலையில் வெளிநாட்டில் இருந்து வந்த ரங்கநாயகியின் மகன் வங்கி கணக்குகளை சரிபார்த்தார். அப்போது பாலகிருஷ்ணன், அவரது மகள் மற்றும் மருமகன் ஆகியோர் தனது தாயை ஏமாற்றி பணத்தை மோசடி செய்தது தெரியவந்தது. இது குறித்து அவர் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணனிடம் புகார் செய்தார்.

3 பேர் கைது

அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, ரங்கநாயகியிடம் பணம் மோசடி செய்த அவரது அண்ணன் பாலகிருஷ்ணன், அவருடைய மகள் கவிப்பிரியா மற்றும் ஆனந்தகுமார் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து சுமார் ரூ.1 கோடி மதிக்கத்தக்க பத்திரங்களும், ரூ.10 லட்சம் மதிக்கத்தக்க ஒரு கார், ரூ.2 லட்சம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் கைதான 3 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த மோசடியில் மூதாட்டியின் வங்கி கணக்கு எண், செல்போ னுக்கு வரும் ரகசிய குறியீட்டு எண் ஆகியவற்றை பயன்படுத்தியும் பணத்தை சுருட்டியது குறிப்பிடத்தக்கது.


Next Story