வங்கி கணக்கை முடக்குவதாக கூறி வாலிபரிடம் ரூ.2¼ லட்சம் மோசடி
ராமநாதபுரம் அருகே வாலிபரிடம் வங்கி கணக்கை முடக்க போவதாக குறுஞ்செய்தி அனுப்பி ரூ.2¼ லட்சம் மோசடி செய்தவர்கள் மீது சைபர்கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ராமநாதபுரம் அருகே வாலிபரிடம் வங்கி கணக்கை முடக்க போவதாக குறுஞ்செய்தி அனுப்பி ரூ.2¼ லட்சம் மோசடி செய்தவர்கள் மீது சைபர்கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வங்கி கணக்கு முடக்கப்படும்
ராமநாதபுரம் அருகே உள்ள புதுவலசை காயிதேமில்லத்நகரை சேர்ந்தவர் தஸ்தகீர் மகன் ஹமீது களஞ்சியம் (வயது 32). இவர் ராமநாதபுரத்தில் உள்ள ஆவண எழுத்தரிடம் உதவியாளராக வேலை செய்து வருகிறார். இவரின் செல்போன் எண்ணிற்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது.
அதில் அவரின் வங்கி கணக்கினை பான் நம்பருடன் இணைக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் வங்கி கணக்கு முடக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஹமீது களஞ்சியம் அதில் கொடுக்கப்பட்டிருந்த லிங்கினை கிளிக் செய்துள்ளார்.
ரூ.2¼ லட்சம்
அதில் கேட்கப்பட்ட வங்கி விவரத்தினை பதிவு செய்த நிலையில் அவருக்கு வந்த ரகசிய குறியீட்டு எண்ணையும் பதிவு செய்துள்ளார். அதன்பின்னர் சில நொடிகளில் அவரின் செல்போன் எண்ணிற்கு 2 தவணைகளாக மொத்தம் ரூ.2 லட்சத்து 23 ஆயிரம் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.
குறுஞ்செய்தி லிங்க் மூலம் தன்னை ஏமாற்றி பணத்தினை எடுத்துகொண்டதை அறிந்த ஹமீது களஞ்சியம் இதுகுறித்து உடனடியாக சைபர்கிரைம் போலீசில் புகார் செய்தார். ராமநாதபுரம் சைபர்கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல்ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் திபாகர் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.