இளம்பெண்ணிடம் ரூ.21 லட்சம் மோசடி
முதலீடு செய்த பணத்தை 5 மடங்காக திருப்பி தருவதாக கூறி குன்னூரை சேர்ந்த இளம்பெண்ணிடம் ரூ.21 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ஊட்டி சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊட்டி
முதலீடு செய்த பணத்தை 5 மடங்காக திருப்பி தருவதாக கூறி குன்னூரை சேர்ந்த இளம்பெண்ணிடம் ரூ.21 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ஊட்டி சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரூ.21 லட்சம் மோசடி
நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த 25 வயது இளம்பெண், ஊட்டி சைபர் கிரைம் போலீசில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
நான் வீட்டில் இருந்து ஆன்லைன் மூலம் பணியாற்றி வருகிறேன். எனக்கு டெலகிராம் மூலம் லிங்க் ஒன்று வந்தது. அந்த லிங்கில் உள்ளே சென்று பார்த்தபோது, அதில் குறிப்பிட்டுள்ள வங்கி கணக்கில் முதலீடு செய்தால் 5 மடங்காக பணத்தை திருப்பி தருவதாக கூறியிருந்தனர். இதையடுத்து முதலில் ரூ.150-யை முதலீடு செய்தேன். பின்னர் எனக்கு ரூ.1000 கிடைத்தது.
இதை நம்பி பல்வேறு தவணைகளாக அந்த வங்கி கணக்கில் ரூ.21 லட்சம் செலுத்தினேன். ஆனால் அவர்கள் குறிப்பிட்டபடி எந்ததொகையும் வரவில்லை. அந்த லிங்கில் இருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது, மேலும் பணத்தை செலுத்தினால் மட்டுமே திருப்பி தரமுடியும் என்று கூறினர். இதனால் ஏமாற்றப்பட்டதை நான் அறிந்தேன். எனவே எனது பணத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
கடன் வாங்கி முதலீடு
இந்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தி இளம்பெண் குறிப்பிட்ட வங்கி கணக்கை முடக்கி வைத்தனர்.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இளம்பெண் கடன் வாங்கி ரூ.21 லட்சம் அதில் முதலீடு செய்து இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மற்றொரு சம்பவம்
இதேபோல ஊட்டியை சேர்ந்த 30 வயது பெண் ஒருவர் வீட்டில் இருந்து பணியாற்றும் வேலை உள்ளதா என்று ஆன்லைனில் தேடிபார்த்து வந்தார். இந்த நிலையில் அவரது முகநூல் பக்கத்தில் வீட்டில் இருந்து பணியாற்ற பகுதிநேர வேலை இருப்பதாக தகவல் வந்தது.
இதில் வேலையில் சேர்ந்த அந்த பெண்ணிடம் டெலகிராம் மூலம் அனைத்து தகவல்களும் பரிமாறப்பட்டது. அப்போது அந்த பெண்ணுக்கு சில வங்கி கணக்குகளை அனுப்பி, அந்த கணக்கிற்கு பணம் அனுப்புமாறு கூறி, அவர்களே பணத்தையும் பெண்ணின் வங்கி கணக்கிற்கு அனுப்பி உள்ளனர். அவர்களின் ஆசை வார்த்தைகளை நம்பிய அந்த பெண் குறிப்பிட்ட தொகையை சிலரது வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார்.
வங்கி கணக்கு முடக்கம்
இதில் கர்நாடகாவை சேர்ந்த பெண்ணின் வங்கி கணக்கும் இருந்துள்ளது. ஏற்கனவே ேமாசடியால் பாதிக்கப்பட்ட அந்த கர்நாடக பெண், தனது வங்கி கணக்கிற்கு தெரியாத நபரின் கணக்கில் இருந்து பணம் வந்ததால் இதுகுறித்து உடனடியாக கர்நாடக சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து ஊட்டி பெண்ணின் வங்கி கணக்கை கர்நாடகா போலீசார் முடக்கினர். அப்போது அந்த பெண்ணின் ரூ.3 லட்சம் உள்பட வங்கி கணக்கில் இருந்த ரூ.6 லட்சத்து 28 ஆயிரம் முடக்கப்பட்டது.
விழிப்புடன் இருக்க வேண்டும்
இதுதொடர்பாக ஊட்டி பெண் அளித்த புகாரின்பேரில், சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி, இதுகுறித்து கர்நாடக போலீசாருக்கு முறையாக தகவல் தெரிவித்தனர். மேலும் ஊட்டி பெண்ணின் பணத்தை மீட்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் இன்ஸ்பெக்டர் பிலிப் கூறுகையில், ஆன்லைன் மூலம் பணத்தை இரட்டிப்பாகி தருகிறோம் என்பன உள்பட பல்வேறு வழிகளில் ஆசைவார்த்தை கூறி பணம் மோசடி செய்யப்படுகிறது. எனவே பொதுமக்கள், வீட்டில் இருந்து பணியாற்றுபவர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.