இளம்பெண்ணிடம் ரூ.22 லட்சம் மோசடி


இளம்பெண்ணிடம் ரூ.22 லட்சம் மோசடி
x
தினத்தந்தி 16 Jun 2023 1:30 AM IST (Updated: 16 Jun 2023 1:30 AM IST)
t-max-icont-min-icon

கோவை இளம்பெண்ணிடம் ஆன்லைன் மூலம் பகுதி நேர வேலைவாய்ப்பு தருவதாக கூறி ரூ.22 லட்சம் மோசடி செய்த மர்ம நபர் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோயம்புத்தூர்

கோவை இளம்பெண்ணிடம் ஆன்லைன் மூலம் பகுதி நேர வேலைவாய்ப்பு தருவதாக கூறி ரூ.22 லட்சம் மோசடி செய்த மர்ம நபர் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டதாரி பெண்

கோவை சிங்காநல்லூர் உப்பிபாளையத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மனைவி லத்திகா லட்சுமி (வயது 29) பி.காம். பட்டதாரி. இவர் கணக்காளராக பணிபுரிகிறார். இவரது வாட்ஸ்-அப் எண்ணிற்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது.

அதில் ஆன்லைன் மூலம் பகுதி நேர வேலை வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து அதில் குறிப்பிடப்பட்டிருந்த லிங்க் மூலம் தனது விபரங்களை லத்திகா லட்சுமி பதிவு செய்தார்.

இதையடுத்து அவரை தொடர்பு கொண்ட நபர் தான் அனுப்பி வைக்கும் யூடியூப் சேனல்களுக்கு சிறந்த முறையில் ரிவ்யூ கொடுத்தால் பணம் கிடைக்கும் என்று தெரிவித்தார்.

இதன் மூலம் ரூ.50 முதல் ரூ.150 வரை சம்பாதிக்கலாம் என்று தெரிவித்தார். அதன்படி அந்த மர்ம நபர் அனுப்பி வைத்த யூடியூப் சேனல்களுக்கு லத்திகா லட்சுமி ரிவ்யூ கொடுத்தார். இதற்கு அவருக்கு ஒரு சிறிய தொகை பணமாக கிடைத்தது.

ரூ.10 ஆயிரம் முதலீடு

இதன்பின்னர் லத்திகா லட்சுமியை தொடர்பு கொண்ட அந்த மர்ம நபர் ஆன்லைன் மூலம் பணத்தை முதலீடு செய்ய வேண்டும். இதன் பின்னர் நாங்கள் கூறும் பணியை நிறைவேற்றி கொடுத்தால் அதிக பணம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறினார்.

இதனை நம்பிய லத்திகா லட்சுமி உடனடியாக ரூ.10 ஆயிரம் முதலீடு செய்தார். பின்னர் அவரது வங்கி கணக்கில் ரூ.14 ஆயிரம் பணம் வரவு வைக்கப்பட்டது.

இதனால் நம்பிக்கை அடைந்த லத்திகா லட்சுமி பின்னர் ரூ.60 ஆயிரத்தை முதலீடு செய்தார். இதற்கு ரூ.90 ஆயிரம் பணத்தை திருப்பி தருவதாக மர்ம நபர் தெரிவித்தார்.

ஆனால் இந்த ரூ.90 ஆயிரம் பணத்தை பெற வேண்டும் என்றால் லத்திகா லட்சுமி வி.ஐ.பி. உறுப்பினராக சேர வேண்டும்.

ரூ.22 லட்சம் மோசடி

இதில் ஒரு புள்ளி பெற ரூ.5 லட்சம் கட்டணமாக செலுத்த வேண்டும். 4 புள்ளிகள் இருந்தால் மட்டுமே லத்திகா லட்சுமியின் வங்கி கணக்கிற்கு லாப தொகையை நேரடியாக செலுத்த முடியும் என்று அந்த மர்ம நபர் தெரிவித்தார்.

இதனை உண்மை என்று நம்பிய லத்திகா லட்சுமி அந்த மர்ம நபர் கூறியபடி ரூ.21 லட்சத்து 99 ஆயிரத்து 999-ஐ செலுத்தினார். அதன்பின்னர் அந்த மர்ம நபர் அவரை தொடர்பு கொள்ளவில்லை.

இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் கோவை மாநகர சைபர்கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story