வேலை வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.23 லட்சம் மோசடி
கோவையில், இந்து சமய அறநிலையத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.23 லட்சம் மோசடி செய்தது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை
கோவையில், இந்து சமய அறநிலையத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.23 லட்சம் மோசடி செய்தது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த மோசடி குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
அரசு வேலை
கோவை அருகே உள்ள ராக்கிபாளையத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவருடைய மகள் கலைச்செல்வி (வயது 30). இவர் அரசு வேலைக்கு முயற்சி செய்து கொண்டு இருந்தார். அப்போது பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்த சரவணகுமார் என்பவரின் அறிமுகம் கிடைத்தது.
அவர் கலைச்செல்வியிடம், தான் ஐ.ஏ.எஸ். அதிகாரி என்றும், சென்னை தலைமை செயலகத்தில் வேலை செய்து வருவதாகவும் கூறி உள்ளார். மேலும் இந்து சமய அறநிலையத்துறையில் வேலை இருப்பதாகவும், அங்கு தனக்கு தெரிந்த அதிகாரிகள்தான் இருக்கிறார்கள் என்பதால், எளிதாக வேலை வாங்கி தருகிறேன் என்றும் தெரிவித்தார்.
ரூ.23 லட்சம் மோசடி
ஆனால் அதற்கு அதிகளவில் பணம் செலவாகும் என்றும் கூறி உள்ளார். அதை நம்பிய கலைச்செல்வி, சரவணகுமாரிடம் ரூ.23 லட்சத்தை கொடுத்ததாக கூறப்படுகிறது. பணத்தை பெற்றதும் மதுரை உள்ளிட்ட கோவில்களில் அரசு வேலை வாங்கி கொடுப்பதாக உறுதியளித்துள்ளார்.
ஆனால் பல மாதங்கள் ஆகியும் அவர் வேலை வாங்கி கொடுக்கவில்லை. இது தொடர்பாக பலமுறை அவரை தொடர்பு கொண்டு கேட்டபோதும் எவ்வித பதிலும் கூறவில்லை. மேலும் அவருடைய செல்போன் எண்ணும் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டு இருந்தது.
போலீசார் விசாரணை
இதனால் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த கலைச்செல்வி, இது குறித்து கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சரவணகுமார், ஏற்கனவே தன்னை ஐ.ஏ.எஸ். அதிகாரி, தாசில்தார் மற்றும் அரசு துறையில் உயர் அதிகாரி என்று கூறி ஏராளமானோரிடம் கோடிக்கணக்கில் பணத்தை பெற்று மோசடி செய்துள்ள போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. மேலும் அது தொடர்பாக அவருடைய நண்பர்கள் 6 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
வலைவீச்சு
தலைமறைவாக உள்ள சரவணகுமாரை வலைவீசி தேடி வருகிறார்கள். அவரை பிடித்த பின்னர்தான், எத்தனை பேரிடம், எவ்வளவு பணம் மோசடி செய்து உள்ளார் என்பது குறித்து தெரியவரும் என்று போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.