தனியார் நிறுவன உரிமையாளரிடம் நூதன முறையில் ரூ.25 லட்சம் மோசடி
கோவையில் தனியார் நிறுவன உரிமையாளரிடம் நூதன முறையில் ரூ.25 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை
கோவையில் தனியார் நிறுவன உரிமையாளரிடம் நூதன முறையில் ரூ.25 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து மாநகர சைபர் கிரைம் போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தனியார் நிறுவன உரிமையாளர்
கோவை வெள்ளலூர் அருகே உள்ள அசோகர் வீதியை சேர்ந்தவர் வெங்கட் கிருஷ்ணா (வயது 51). இவர் தானியங்கி தீயணைப்பு, பாதுகாப்பு உபகரணங்களை தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் மூலம் கோவையில் இருந்து தமிழகம் மட்டுமல்லாமல் குஜராத், மராட்டியம் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு தீயணைப்பு உபகரணங்களை அனுப்பி வருகிறார்.
கடந்த 10 ஆண்டாக இந்த நிறுவனத்தை நடத்தி வரும் இவர், அதற்கான பணத்தை வாடிக்கையாளர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் பெற்று வருகிறார். பணம் தொடர்பான தகவல்களை வாடிக்கையாளர்கள் வெங்கட் கிருஷ்ணாவின் இ-மெயில் முகவரிக்கு அனுப்பி வைப்பது வழக்கம்.
நூதன முறையில் மோசடி
இந்த நிலையில் மர்ம ஆசாமிகள், வெங்கட் கிருஷ்ணாவின் இ-மெயிலை திடீரென்று முடக்கினார்கள். இது தொடர்பாக அவருக்கு விவரம் தெரியவரவே, யார் முடக்கம் செய்து உள்ளனர் என்பது தொடர்பாக ஆய்வு செய்து கொண்டு இருந்தார்.
அப்போது திடீரென்று இ-மெயில் சரியானது. உடனே உள்ளே சென்று பார்த்தபோது, வாடிக்கையாளர் ஒருவருக்கு வெங்கட் கிருஷ்ணாவின் வங்கி கணக்கை கொடுக்காமல், அந்த மர்ம ஆசாமியின் வங்கி கணக்கை கொடுத்து, நூதன முறையில் அந்த நபரிடம் இருந்து ரூ.25 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது.
தீவிர விசாரணை
இதனால் அதிர்ச்சி அடைந்த வெங்கட் கிருஷ்ணா, இது குறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நூதன முறையில் ரூ.25 லட்சத்தை மோசடி செய்த மர்ம ஆசாமிகள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:-
வெங்கட் கிருஷ்ணாவின் இ-மெயிலை முடக்கிய மர்ம ஆசாமிகள், வெங்கட் கிருஷ்ணாவிடம் உபகரணங்கள் வாங்கிய வாடிக்கையாளர் ஒருவருக்கு, அவருடைய இ-மெயில் ஐ.டி.யில் இருந்து தங்களின் வங்கி கணக்கை அனுப்பி, அதற்கு பணம் போடும்படி கூறி உள்ளனர்.
மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு
வெங்கட் கிருஷ்ணாதான் தங்களுக்கு மெயில் அனுப்பி இருக்கிறார் என்று நினைத்து அந்த வாடிக்கையாளரும் அந்த வங்கி கணக்குக்கு பணத்தை அனுப்பி உள்ளார். ஆனால் வெங்கட் கிருஷ்ணா தனது வங்கி கணக்கையும், இ-மெயில் முகவரியையும் சரிபார்த்தபோதுதான் இந்த மோசடி சம்பவம் குறித்து தெரியவந்தது. எனவே இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை வலைவீசி தேடி வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.