நிலம் விற்பனை செய்வதாக கூறிவிவசாயியிடம் ரூ.28¼ லட்சம் மோசடிபெண் உள்பட 5 பேர் மீது வழக்கு


நிலம் விற்பனை செய்வதாக கூறிவிவசாயியிடம் ரூ.28¼ லட்சம் மோசடிபெண் உள்பட 5 பேர் மீது வழக்கு
x

நிலம் விற்பனை செய்வதாக கூறி விவசாயியிடம் ரூ.28¼ லட்சம் மோசடி செய்தது தொடர்பாக பெண் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

சேலம்

சேலம்,

நிலம் விற்பனை

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் அருகே உள்ள மேற்கு காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 47). விவசாயியான இவர் சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமாரை சந்தித்து மனு ஒன்று கொடுத்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

சின்னசேலம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த ராதிகா, அவரது மகன் மகாவிஷ்ணு ஆகியோருக்கு சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள நரசிங்கபுரத்தில் 3 ஆயிரத்து 600 சதுர அடி காலிமனை நிலம் உள்ளது. அந்த இடத்தை தனக்கு விற்பனை செய்வதாக கூறி முன்பணமாக ரூ.6 லட்சம் பெற்றனர். அப்போது கிரைய உடன்படிக்கை பத்திரம் எழுதி வாங்கினேன். புரோக்கர் சண்முகம் மற்றும் சக்தி, சிங்காரவேல் ஆகியோர் சாட்சியாக கையெழுத்திட்டனர். 1 மாதம் கடந்த நிலையில் சொத்தை கிரையம் செய்ய நான் தயாராக இருந்தேன். அப்போது திடீரென ராதிகா அந்த இடத்தை விற்பனை செய்யவில்லை என்றும் வாங்கிய முன்பணத்துக்கு ரூ.2.50 வட்டி தருவதாக தெரிவித்தார்.

வழக்கு

குடும்ப செலவுக்கு மேலும் பணம் தேவைப்படுகிறது என்று ராதிகா கூறியதால் அதை நம்பி கிரைய உடன்படிக்கை பத்திரம் மற்றும் கடனாக பல தவணையாக பணம் கொடுத்தேன். மொத்தம் அவருக்கு ரூ.28 லட்சத்து 20 ஆயிரம் கொடுத்துள்ளேன். பின்னர் வாங்கிய பணத்தை அவர் கொடுக்கவில்லை. இதையடுத்து தான் அவர்கள் ஒன்றாக சேர்ந்து நிலம் விற்பனை செய்வதாக கூறி என்னிடம் பணத்தை வாங்கி மோசடி செய்தது தெரியவந்தது. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தரவேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.

இதுகுறித்து விசாரணை நடத்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு சூப்பிரண்டு சிவக்குமார் உத்தரவிட்டார். அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு இளமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் சந்திரன் ஆகியோர் விசாரணை நடத்தினர். இதில் ராதிகா, மகாவிஷ்ணு, சண்முகம், சக்தி, சிங்காரவேல் ஆகியோர் விவசாயி சீனிவாசனிடம் ரூ.28 லட்சத்து 20 ஆயிரம் மோசடி செய்தது உறுதியானது. இதையடுத்து அவர்கள் 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story