மாத தவணையில் வீட்டு மனை வழங்குவதாக கூறி ரூ.3½ லட்சம் மோசடி
மாத தவணையில் வீட்டு மனை வழங்குவதாக கூறி ரூ.3½ லட்சம் மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் சூப்பிரண்டிடம் மனு கொடுத்தனா்.
பவானி தேராஜ் பிள்ளை தெருவை சேர்ந்த செல்வி (வயது 56) உள்பட 7 பேர் நேற்று ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகரிடம் தனித்தனியாக புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:-
பவானி பெரியபுலியூர் பகுதியில் வீட்டு மனைகள் பிரிக்கப்பட்டு, சுலப தவணை மூலம் வீட்டு மனைகள் வழங்குவதாக விளம்பரம் செய்தனர். இதில், மாதம் ரூ.1,000 என 49 மாதங்கள் செலுத்தினால், இறுதியில் வீட்டு மனையை கிரையம் செய்து தருவதாக உறுதியளித்தனர். இதற்கு முகவராக காலிங்கராயன் பாளையத்தை சேர்ந்த மெடிக்கல் கடை உரிமையாளர் ஒருவர் செயல்பட்டார். அவர்கள் கூறியபடி, 49 மாத தவணை தொகையை முழுமையாக அதாவது ரூ.3 லட்சத்து 43 ஆயிரம் செலுத்தி விட்டோம். ஆனால், அவர்கள் எங்களுக்கான வீட்டு மனைகளை கிரையம் செய்து கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர். இதுகுறித்து முறையிட்டபோது, 2 மாதத்தில் கிரையம் செய்து தருவதாக உறுதியளித்தனர். ஆனால், தற்போது வரை எங்களுக்கான வீட்டு மனைகளை கிரையம் செய்து தராமல் ஏமாற்றி வருகின்றனர். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, எங்களுக்கான வீட்டு மனைகளையோ அல்லது நாங்கள் செலுத்திய பணத்தையோ மீட்டு தர வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.