வக்கீல் என்று கூறி விவசாயியிடம் ரூ.3 லட்சம் மோசடி


வக்கீல் என்று கூறி விவசாயியிடம் ரூ.3 லட்சம் மோசடி
x
தினத்தந்தி 30 Jun 2023 12:15 AM IST (Updated: 30 Jun 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

போடியில் வக்கீல் என்று கூறி விவசாயியிடம் ரூ.3 லட்சம் மோசடி செய்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தேனி

போடி அருகே உள்ள துரைராஜபுரம் காலனியை சேர்ந்தவர் காந்தி (வயது 50). விவசாயி. இவர், போடி நகர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அந்த புகாரில், எனக்கும், துரைராஜபுரத்தை சேர்ந்த ஈஸ்வரன் என்பவருக்கும் இடையே இடப் பிரச்சினை இருந்து வந்தது. இந்நிலையில் ஈஸ்வரன் நிலப் பிரச்சினை தொடர்பாக தேனி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதை அறிந்த போடி குப்பிநாயக்கன்பட்டியை சேர்ந்த ராஜசேகர் என்பவர் எனக்கு அறிமுகமானார். அவர் தான் ஒரு வக்கீல் என்றும், எனது இடப்பிரச்சினையை தீர்த்து வைப்பதாகவும் கூறினார். இதற்காக அவர் ரூ.3 லட்சம் என்னிடம் வாங்கினார்.

ஆனால் அந்த வழக்கில் ராஜசேகர் ஆஜராகாமல் இருந்து வந்தார். இதனால் அந்த வழக்கில் ஈஸ்வரனுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. இதன் காரணமாக சந்தேகமடைந்த நான் விசாரித்தபோது ராஜசேகர் வக்கீல் இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து நான் கொடுத்த பணத்தை அவரிடம் திருப்பி கேட்டேன். ஆனால் ராஜசேகர் தகாத வார்த்தைகளால் பேசியதுடன், என்னை கைகளால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். எனவே என்னிடம் பணத்தை வாங்கி மோசடி செய்த ராஜசேகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story