பெண்ணின் வங்கி கணக்கில் ரூ.3 லட்சம் மோசடி


பெண்ணின் வங்கி கணக்கில் ரூ.3 லட்சம் மோசடி
x
தினத்தந்தி 25 Feb 2023 12:15 AM IST (Updated: 25 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தனியார் கூரியர் கம்பெனி செயலி என்று தவறான செயலியை அனுப்பி பெண்ணிடம் இருந்து ரூ.2 லட்சத்து 97 ஆயிரம் மோசடி செய்தவர்கள் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

சிவகங்கை


தனியார் கூரியர் கம்பெனி செயலி என்று தவறான செயலியை அனுப்பி பெண்ணிடம் இருந்து ரூ.2 லட்சத்து 97 ஆயிரம் மோசடி செய்தவர்கள் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

மோசடி

காரைக்குடி டி.டி. நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீநிதி (வயது35). இவரது கணவர் மணிவண்ணன். இவர் ஈராக் நாட்டில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். ஸ்ரீநிதி கடந்த 6-ந் தேதி மருந்து ஒன்றை ஆன்லைனில் அனுப்பும்படி கணவரிடம் கேட்டு இருந்தார். அவருக்கு அந்த மருந்து ஒரு தனியார் கூரியர் நிறுவனத்தின் மூலம் அனுப்பி வைத்துள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.

அந்த மருந்து உரிய நேரத்தில் வராததால் ஸ்ரீநிதி செல்போனில் அந்த தனியார் கூரியர் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை தொடர்பு எண்ணை தேடிப் பார்த்து அதில் கிடைத்த எண்ணில் தொடர்பு கொண்டார். அப்போது அதில் பேசியவர்கள் தாங்கள் அனுப்பும் செயலியை பதிவு செய்யும்படி கூறி ஒரு செயலியை அனுப்பி உள்ளனர்.

அவர்கள் அனுப்பியதை உண்மை என்று நம்பிய ஸ்ரீநிதியும் அந்த செயலியை தன்னுடைய செல்போனில் பதிவு செய்தார். அத்துடன் அந்த செயலியில் கேட்கப்பட்ட தனது வங்கி தொடர்பான விவரங்களையும் தெரிவித்தார். இதன் பின்னர் அவருடைய வங்கி கணக்கில் இருந்து அவருக்கு தெரியாமலேயே 7 தவணைகளில் ரூ.2 லட்சத்து 97 ஆயிரத்து 997-ஐ எடுத்துள்ளனர்.

வழக்கு பதிவு

இதைத் தொடர்ந்து ஸ்ரீநிதி சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜிடம் இதுகுறித்து புகார் செய்தார். அவரது உத்தரவின் பேரில் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்தார்.

போலீசார் நடத்திய விசாரணையில் கொல்கத்தா மற்றும் மராட்டிய மாநிலத்தில் இருந்து மோசடி நபர்கள் பேசியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த நபர்கள் பயன்படுத்திய வங்கி கணக்கு எண்ணையும் சைபர் கிரைம் போலீசார் முடக்கி வைத்துள்ளனர்.

புகார் தெரிவிக்கலாம்

ேமலும் இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:-

வங்கி கஸ்டமர் கேர் போல் ஆள்மாறாட்டம் செய்து போலியாக செயலிகளை அனுப்பி பதிவு செய்ய சொல்பவர்களின் செயலியை பதிந்தால் போன் கட்டுப்பாடு இழந்து பண இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே தெரியாத நபர்கள் அனுப்பும் செயலி அல்லது லிங்கை பயன்படுத்த வேண்டாம். மேலும் அது போன்று பயன்படுத்தி பண இழப்பு ஏற்பட்டால் உடனடியாக 1930 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகாரை தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Related Tags :
Next Story