கார் விற்பதாக கூறி மெக்கானிக்கிடம் ரூ.3¼ லட்சம் மோசடி
ராமநாதபுரம் அருகே கார் மெக்கானிக்கிடம் குறைந்த விலைக்கு கார் விற்பனை செய்வதாக கூறி ரூ.3¼ லட்சம் மோசடி செய்தவர்கள் மீது சைபர்கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
ராமநாதபுரம் அருகே கார் மெக்கானிக்கிடம் குறைந்த விலைக்கு கார் விற்பனை செய்வதாக கூறி ரூ.3¼ லட்சம் மோசடி செய்தவர்கள் மீது சைபர்கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
கார் விற்பதாக...
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள கடம்பகுடியை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 36). இவர் தொண்டியில் கார் மெக்கானிக் கடை வைத்துள்ளார். கடந்த மாதம் 4-ந் தேதி இவர் முகநூலில் பார்த்து கொண்டிருந்தபோது 2016 மாடல் கார் ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்திற்கு விற்பனை செய்வதாக வந்த அறிவிப்பை பார்த்து அதில் குறிப்பிடப்பட்டிருந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டார்.
அப்போது அவரிடம் பேசிய நபர் தனது பெயர் சிவக்குமார், ஐதராபாத்தில் உள்ள ராணுவ முகாமில் வேலை செய்து வருவதாகவும், தனக்கு சொந்த ஊர் கோவை என்றும் காரை விற்று விட்டு காஷ்மீருக்கு செல்ல இருப்பதாக தெரிவித்துள்ளார். அதனை நம்பிய கனகராஜ் அவரின் கார் குறித்த விபரங்களை கேட்டபோது மர்ம நபர் அனுப்பி வைத்துள்ளார். அதனை பார்த்த கனகராஜ் கார் பிடித்துவிட்டதாகவும் தானே வாங்கி கொள்வதாகவும் கூறியுள்ளார்.
பணம் மோசடி
இதன்படி மர்ம நபர் கேட்ட ஆவணங்களை கொடுத்ததுடன் பல்வேறு தவணைகளில் ரூ.3 லட்சத்து 22 ஆயிரம் அனுப்பி வைத்துள்ளார்.
பணம் பெற்றுக்கொண்ட நிலையில் திடீரென்று சில நாட்களில் ஆங்கிலத்தில் பேசிய பெண் ஒருவர் தான் சிவக்குமாரின் மனைவி என்று தெரிவித்து காருக்கு மேலும் ரூ.1 லட்சம் வழங்க வேண்டும் என்றும் அதனை தந்தால் தானே நேரில் வந்து காரை தருவதாக கூறியுள்ளார். பேசிய தொகையை விட அதிகமாக கேட்பதால் சந்தேகமடைந்த கனகராஜ் அதுகுறித்து விசாரித்த போது ராணுவ வீரர் என்று கூறி மோசடி நடப்பதாக தெரிந்து கொண்டுதானும் ஏமாற்றப்பட்டு வருவதை உணர்ந்தார். இதனை தொடர்ந்து கனகராஜ் தன்னிடம் கார் விற்பனை செய்வதாக கூறி ரூ.3¼ லட்சம் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சைபர்கிரைம் போலீசில் புகார் செய்தார். ராமநாதபுரம் சைபர்கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல்ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் திபாகர் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.