பகுதிநேர வேலை தருவதாக ரூ.39 லட்சம் மோசடி
வாணியம்பாடியில் பகுதிநேர வேலை தருவதாகக்கூறி ரூ.39 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பகுதி நேர வேலை
வாணியம்பாடி காதர்பேட்டையை சேர்ந்தவ ஒருவருக்கு சமூக வலைதளத்தில் இருந்து கடந்த மாதம் 22-ந் தேதி பகுதி நேர வேலை உள்ளதாகவும், அதன் மூலம் வீட்டிலிருந்து பணம் சம்பாதிக்கலாம் என குறுந்தகவல் வந்துள்ளது. இதனை நம்பிய அவர் குறுந்தகவலில் இருந்த லிங்கில் தனது சுயவிவரங்கள், வங்கி கணக்குகளை கொடுத்துள்ளனர்.
அதன்பின்னர் அவரது செல்போனுக்கு ஒரு டாஸ்க் வந்துள்ளது. அதில் இந்தியாவில் உள்ள நட்சத்திர ஓட்டல்களின் தரங்கள் குறித்து ஸ்டார் மதிப்பெண்கள் அளிக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கொடுத்தால் பணம் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.
ரூ.39லட்சம் மோசடி
அதன் படி அவர் மதிப்பெண் கொடுத்துள்ளார். அதன்பிறகு சமூக வலைதளம் மூலம் ஒரு லிங்கை அனுப்பி அதில் உள்ள வங்கி கணக்கிற்கு பணம் செலுத்தினால் கூடுதலாக பணம் தருவதாக கூறியுள்ளனர். அதை நம்பி பல்வேறு தவணைகளாக ரூ.38 லட்சத்து 96 ஆயிரத்து 645 செலுத்தி உள்ளார். ஆனால் கூடுதல் பணம் வரவில்லை. இதுகுறித்து கேட்டதற்கு அந்த நபர் முறையாக பதில் கூறவில்லை.
இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர் திருப்பத்தூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.