ஆன்லைன் மூலம் பெண்ணிடம் ரூ.4¼ லட்சம் மோசடி
மின் கட்டணத்தை செலுத்தக்கோரி ‘லிங்க்’ அனுப்பி ஆன்லைன் மூலம் பெண்ணிடம் ரூ.4¼ லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின் கட்டணத்தை செலுத்தக்கோரி 'லிங்க்' அனுப்பி ஆன்லைன் மூலம் பெண்ணிடம் ரூ.4¼ லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சைபர் கிரைம் போலீசில் புகார்
கோவை அழகேசன் ரோட்டை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி கிருஷ்ணவேணி (வயது 52). இவர் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் மனு ஒன்று அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கடந்த 22-ந் தேதி எனது மாமியாரின் செல்போனுக்கு ஒரு எஸ்.எம்.எஸ். (குறுஞ்செய்தி) வந்தது. அதில் மின் கட்டணத்தை உடனடியாக செலுத்த வில்லை என்றால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று கூறியிருந்தது. இதைப்பார்த்த எனது மாமியார் அந்த எஸ்.எம்.எஸ்.-ஐ எனக்கு அனுப்பினார். உடனே நான் அந்த எண்ணை தொடர்புகொண்டு பேசினேன். அப்போது எதிர்முனையில் பேசியவர் மின் கட்டணத்தை உடனடியாக ஆன்லைனில் செலுத்தவில்லை என்றால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று கூறினார். மேலும் மின்கட்டணம் செலுத்துவதற்கான 'லிங்க்' ஒன்றையும் எனது செல்போனுக்கு அனுப்பினார்.
ரூ.4¼ லட்சம் மோசடி
இதை உண்மை என நம்பிய நான் அந்த லிங்கிற்குள் சென்று அதில் கொடுக்கப்பட்ட வங்கி கணக்கு விவரங்கள் அனைத்தையும் பதிவு செய்தேன். மேலும் அடுத்த பக்கத்தில் மின் இணைப்பு துண்டிக்காமல் இருக்க உடனடியாக ரூ.10 அனுப்பும் படி கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து நான் ஆன்லைன் மூலம் ரூ.10 அனுப்பி வைத்தேன். அதன் பின்னர் சிறிது நேரத்தில் எனது வங்கி கணக்கில் இருந்து ரூ.4 லட்சத்து 24 ஆயிரம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த நான் மின்கட்டணம் செலுத்த கூறியவரின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டேன். ஆனால் சுவிச்ஆப் செய்யப்பட்டு இருந்தது. எனவே எனது வங்கி கணக்கில் இருந்து எடுக்கப்பட்ட ரூ.4¼ லட்சத்தை மீட்டு தரவேண்டும். இவ்வாறு அதில் கூறி இருந்தது.
இந்த புகாரின் பேரில், மாநகர சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தண்டபாணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
போலீசார் அறிவுரை
இதில் கிருஷ்ணவேனியின் நிரந்தர வைப்பு தொகை கணக்கை குளோஸ் செய்து ரூ.2 லட்சத்து 90 ஆயிரத்தை மர்ம நபர்கள் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்று செல்போனுக்கு வரும் லிங்கை கிளிக் செய்து வங்கி கணக்கு விவரங்களை பதிவிட வேண்டாம் என்று போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.