சிறுநீரகத்தை தானமாக பெற பெண்ணிடம் ரூ.4 லட்சம் மோசடி
சிறுநீரகத்தை தானமாக பெற பெண்ணிடம் ரூ.4 லட்சம் மோசடி
கணபதி, ஜூலை
கோவை பெண்ணின் சிறுநீரகத்தை தானமாக பெறுவதாக கூறி ரூ.4 லட்சம் மோசடி செய்த டாக்டர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
குடும்ப வறுமை
கோவை ரத்தினபுரியை சேர்ந்தவர் 40 வயது பெண். கூலி வேலைக்கு சென்று வருகிறார். இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் குழந்தைகள் உள்ளனர். இவர் குடும்ப வறுமை காரணமாக கஷ்டப்பட்டு வந்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டில், அவரிடம் உறவினர் ஒருவர் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஒரு சிறுநீரகத்தை கோடிக்கணக்கான ரூபாய்க்கு வாங்குவார்கள் என்று கூறினார். இதையடுத்து அந்த பெண் அந்த தனியார் மருத்துவமனை குறித்து இணையதளத்தில் தேடி உள்ளார். அப்போது அவருக்கு ஒரு டாக்டரின் செல்போன் எண் கிடைத்தது. அதில் தொடர்பு கொண்டு அந்த பெண் பேசினார்.
அப்போது எதிர்முனையில் பேசியவர் எனது பெயர் தாமஸ் ஆரோன் பெனா (45) என்றும், பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை பிரிவில் டாக்டராக பணியாற்றுவதாகவும் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து அந்த பெண், தனது சிறுநீரகத்தை தானம் செய்வது குறித்து அந்த டாக்டரிடம் கூறி உள்ளார். அப்போது அவர், உங்களது சிறுநீரகத்தை தானமாக பெற்றுக்கொள்கிறோம். அதற்கு ரூ.6 கோடியே 20 லட்சம் தருகிறோம். ஆனால் அதற்கு முன்பாக அறுவை சிகிச்சை கட்டணம் ரூ.4 லட்சத்து 14 ஆயிரத்து 269-ஐ முன்கூட்டியே செலுத்த வேண்டும் என தெரிவித்து வங்கி கணக்கு எண் அனுப்பி வைத்து உள்ளார். அதன்பின்னர் நீங்கள் செலுத்தும் பணத்துடன் மொத்த பணத்தையும் தந்து விடுவோம் தெரிவித்துள்ளார்.
ரூ.4 லட்சம் மோசடி
இதனால் தனது குடும்ப வறுமையை கருத்தில் கொண்டு அந்தப் பெண் தனது சிறுநீரகத்தை தானமாக கொடுக்க முடிவு செய்தார். இதனை அவர் குடும்பத்தினரிடம் தெரிவிக்கவில்லை என தெரிகிறது. தொடர்ந்து அவர் தனக்கு தெரிந்தவர்களிடம் பணத்தை கடனாக பெற்று டாக்டரின் வங்கி கணக்கில் ரூ.4 லட்சத்து 14 ஆயிரத்து 269-ஐ செலுத்தி உள்ளார். இந்த தகவல் எப்படியோ அந்த பெண்ணின் குடும்ப த்தினருக்கு தெரியவந்தது.
உடனே அவர்கள், சிறுநீரகத்தை தானமாக கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், கொடுத்த பணத்தை திருப்பி வாங்குமாறு தெரிவித்துள்ளனர். பின்னர் தனது முடிவை மாற்றிகொண்ட அந்த பெண் தான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்கலாம் என்று அவரை தொடர்பு கொண்ட போது செல்போன் சுவிட்ச்- ஆப் என்று வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் இந்த மோசடி குறித்து ரத்தினபுரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் நம்பிக்கை மோசடி பிரிவின் கீழ் தாமஸ் ஆரோன் பெனா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலி டாக்டரா?
இதுகுறித்து போலீசார் கூறும்போது, சிறுநீரகத்தை தானமாக கொடுப்பது குறித்து அந்த பெண் ஆன்லைனில் தேடிய போது கிடைத்த செல்போன் எண்ணில் பேசிய நபர் உண்மையிலேயே டாக்டர் தானா, போலி டாக்டரா? என்பது தெரியவில்லை. அந்தப் பெண் அவரை நேரில் பார்த்ததில்லை. செல்போனில் மட்டுமே பேசி உள்ளார். பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது என்றனர்.
----