2-வது திருமணம் செய்து பெண்ணிடம் ரூ.40 லட்சம் மோசடி
முதல் திருமணத்தை மறைத்து, காதலித்து ஏமாற்றி 2-வது திருமணம் செய்து பெண்ணிடம் ரூ.40 லட்சம் மோசடி செய்த வாலிபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முதல் திருமணத்தை மறைத்து, காதலித்து ஏமாற்றி 2-வது திருமணம் செய்து பெண்ணிடம் ரூ.40 லட்சம் மோசடி செய்த வாலிபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காதல் திருமணம்
திருவாரூர் மாவட்டம் வேளாங்குடி பகுதியை சேர்ந்த 31 வயது பெண் கோவை காந்திபுரத்தில் உள்ள மத்திய மகளிர் போலீசில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
நான் பட்டப்படிப்பை முடித்து விட்டு கோவையில் உள்ள ஒரு தனியார் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில் அரசு வேலைக்கு பயிற்சி பெற்று வந்தேன். அப்போது எனக்கு, காந்திபுரம் 2-வது வீதியில் செல்போன் கடையில் வேலை செய்த அப்துல் ரகீம் (34) என்பவ ருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது.
இதையடுத்து நாங்கள் 2 பேரும் பெற்றோருக்கு தெரியாமல் கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் திருமணம் செய்து வாழ்ந்து வந்தோம். தற்போது நான் 7 மாத கர்ப்பிணியாக உள்ளேன்.
ரூ.40 லட்சம் கொடுத்தேன்
இந்த நிலையில் சொந்த தொழில் செய்ய பணம் தேவைப்படுவ தாக எனது கணவர் கூறினார். அதை நம்பி நான் ரூ.40 லட்சம் மற்றும் 4½ பவுன் செயின் மற்றும் வைர மோதிரத்தை அவரிடம் கொடுத்தேன்.
ஆனால் அவர் தொழில் தொடங்காமல் புதிதாக வீடு வாங்கினார். இது குறித்து நான் கேட்டபோது எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது.நான் கடந்த மே மாதம் என் கணவரின் செல்போனை பார்த்த போது, அவர், வேறு ஒரு பெண்ணுடன் பலமுறை பேசியதை கண்டுபிடித்தேன்.
அந்த பெண் யார் என்று விசாரித்ததில், அது அவருடைய முதல் மனைவி என்பதும், அவர்களுக்கு திருமணம் ஆகி 4 வயதில் மகன் இருப்பதும் தெரியவந்தது.
வெளிநாடு சென்றார்
இது பற்றி கேட்டதால் அவர், என்னிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார். இதையடுத்து நான் போலீசில் புகார் செய்வேன் என்பதை அறிந்த எனது கணவர் அப்துல் ரகுமான் வெளிநாட் டுக்கு தப்பிச்சென்றுவிட்டார்.
எனவே முதல் திருமணத்தை மறைத்து என்னை ஏமாற்றி காதலித்து 2-வது திருமணம் செய்து ரூ.40 லட்சத்தை மோசடி செய்த அப்துல் ரகுமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
வாலிபர் மீது வழக்கு
இந்த புகாரின்பேரில் அப்துல் ரகுமான் மீது ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி உள்பட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.