பெண்ணிடம் ரூ.42.42 லட்சம் மோசடி; உறவினர்கள் 3 பேர் கைது


பெண்ணிடம் ரூ.42.42 லட்சம் மோசடி; உறவினர்கள் 3 பேர் கைது
x

வங்கியில் ஏலம்விடும் நகைகளை குறைந்த விலைக்கு வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.42 லட்சத்து 42 ஆயிரத்தை மோசடி செய்த உறவினர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

வங்கியில் ஏலம்விடும் நகைகளை குறைந்த விலைக்கு வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.42 லட்சத்து 42 ஆயிரத்தை மோசடி செய்த உறவினர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

குறைந்த விலைக்கு நகை

நெல்லை மாவட்டம் களக்காடு பத்மநேரியை சேர்ந்தவர் குமாரவேல் மகள் தனலட்சுமி (வயது 36). இவரின் உறவினரான தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணியை சேர்ந்த குமார் (29) என்பவர் ராமநாதபுரத்தில் உள்ள தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குமார் தனது வங்கியில் ஏலம் விடும் நகைகளை குறைந்த விலைக்கு வாங்கி தருவதாக தனலட்சுமியிடம் தெரிவித்தார். இதனை நம்பிய தனலட்சுமி தன்னிடம் இருந்த சுமார் ரூ.42 லட்சத்து 42 ஆயிரத்தை நகைகள் வாங்குவதற்காக குமாரின் வங்கி கணக்கு, அவரின் மனைவி, தாய் உள்ளிட்டவர்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

3 பேர் கைது

ஆனால் தனலட்சுமிக்கு நகைகள் வாங்கி கொடுக்காமல் குமார் ரூ.42.42 லட்சத்தை மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த தனலட்சுமி நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு கொடுத்தார். அதன் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி போலீஸ் துணை சூப்பிரண்டு பொன்ராகு மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் முத்து தலைமையிலான போலீசார், குமார், அவரது மனைவி பவானி (26), தாய் தமிழ்செல்வி (50) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.

இந்த வழக்கில் துரிதமாக செயல்பட்ட போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் பாராட்டினார்.


Related Tags :
Next Story