சீட்டு நடத்தி ரூ.50 லட்சம் மோசடி


சீட்டு நடத்தி ரூ.50 லட்சம் மோசடி
x

வேடசந்தூர் அருகே, சீட்டு நடத்தி ரூ.50 லட்சம் மோசடி செய்ததாக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள பாகாநத்தம் கிராம மக்கள் சிலர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். பின்னர் மாதாந்திர சீட்டு நடத்தி தங்களை 2 பேர் மோசடி செய்து விட்டதாக கூறி புகார் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், நாங்கள் கூலி வேலை செய்து வாழ்ந்து வருகிறோம். பாகாநத்தத்தில் 2 பேர் மாதாந்திர சீட்டு நடத்தினர். அந்த சீட்டுக்கு மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் வீதம் 20 மாதங்களுக்கு பணம் செலுத்த வேண்டும். அதன்படி கடந்த 2019-ம் ஆண்டு நாங்கள் 50 பேர் அவர்களிடம் மாதாந்திர சீட்டில் சேர்ந்தோம். மேலும் மாதந்தோறும் சீட்டு பணத்தை செலுத்தினோம். அந்த வகையில், நாங்கள் அனைவரும் ரூ.50 லட்சம் வரை சீட்டு பணமாக அவர்களிடம் கொடுத்து இருக்கிறோம்.

இதற்கிடையே நாங்கள் செலுத்திய சீட்டு பணத்தை முறையாக திரும்ப தராமல் மோசடி செய்துவிட்டனர். மேலும் சீட்டு பணத்தை வசூலித்தவர்களில் ஒருவர் கடந்த 2 ஆண்டுகளாக தலைமறைவாகி விட்டார். தலைமறைவான நபர், மராட்டிய மாநிலம் நாசிக்நகரில் வசிப்பதாக தெரிகிறது. இதனால் பணத்தை இழந்த நாங்கள் பெரும் சிரமப்பட்டு வருகிறோம். எனவே நாங்கள் செலுத்திய சீட்டு பணத்தை மீட்டு தரவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.


Next Story