ரூ.60 லட்சம் லாட்டரி அடித்ததாக கூறி பட்டதாரி பெண்ணிடம் ரூ.6 லட்சம் மோசடி - போலி ஆன்லைன் செயலி மூலம் பணத்தை சுருட்டிய வாலிபர் கைது


ரூ.60 லட்சம் லாட்டரி அடித்ததாக கூறி பட்டதாரி பெண்ணிடம் ரூ.6 லட்சம் மோசடி - போலி ஆன்லைன் செயலி மூலம் பணத்தை சுருட்டிய வாலிபர் கைது
x

ரூ.60 லட்சம் லாட்டரி அடித்ததாக கூறி போலி ஆன்லைன் செயலி மூலம் பட்டதாரி பெண்ணிடம் ரூ.6 லட்சம் மோசடி செய்த வாலிபர் பிடிபட்டார்.

சென்னை

ஆவடி அடுத்த கோவில்பதாகை பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார். இவரது மனைவி சந்தியா (வயது 24). எம்.பி.ஏ. பட்டதாரியான இவர், கடந்த மே மாதம் வீட்டில் இருந்து பணிபுரியும் விதமாக ஆன்லைனில் வேலை தேடினார். அப்போது வர்த்தக செயலி மூலம் வார சம்பளத்திற்கு வீட்டிலிருந்து சோப்பு பேக்கிங் செய்யும் வேலை பற்றிய விளம்பரத்தை கண்டுள்ளார். அந்த விளம்பரத்தில் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது. இதையடுத்து சந்தியா அந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ளவே, வாட்ஸ்-அப் மூலம் பேசிய மர்ம நபர் ரூ.5 ஆயிரம் முன்பணம் செலுத்தினால் உங்களுக்கு வேலை உறுதி செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

பணத்தை செலுத்தி முன்பதிவு செய்த சந்தியாவை 20 நாட்கள் கழித்து தொடர்பு கொண்ட அந்த நபர் உங்களுக்கு அதிர்ஷ்ட குலுக்கல் முறையில் எங்கள் நிறுவனம் சார்பில் ரூ.60 லட்சம் லாட்டரி அடித்துள்ளதாகவும், அதை பெறுவதற்கு முன்பணமாக ரூ.7.5 லட்சம் வரி சலுகையாக செலுத்துமாறு கூறியுள்ளார்.

அதை உண்மை என்று நம்பிய சந்தியா தனது நகைகளை அடகு வைத்தும், உறவினர்களிடம் கடன் வாங்கியும் சுமார் ரூ.6 லட்சம் வரை பணத்தை அடையாளம் தெரியாத அந்த நபரின் வங்கி கணக்கில் தவணை முறையில் செலுத்தியுள்ளார்.

அதன் பின்னர் பரிசுத்தொகை குறித்து மர்ம நபரிடம் கேட்கவே, அவர் சரியாக பதில் அளிக்காமல் இணைப்பை துண்டித்துள்ளார். தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த சந்தியா ஆவடி சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் ஆவடி துணை கமிஷனர் மகேஷ் தலைமையில், உதவி கமிஷனர் புருஷோத்தமன், சப்-இன்ஸ்பெக்டர் விமலநாதன் உள்ளிட்ட தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அத்துடன் அந்த மர்ம நபரின் செல்போன் நம்பரை வைத்து விசாரித்ததில் மோசடியில் ஈடுபட்ட நபர் சென்னை தண்டையார்பேட்டை வ.உ.சி மார்க்கெட் பகுதியில் வசிக்கும் மதன்குமார் (வயது 32) என்று தெரிந்தது.

இதையடுத்து போலீசார் மதன்குமாரை நேற்று கைது செய்து போலீஸ் நிலையத்தில் கொண்டு வந்து வைத்து விசாரணை செய்தனர். அதில் மதன்குமார் போலியாக வர்த்தக ஆன்லைன் செயலி ஒன்றை உருவாக்கி அதன் மூலம் வேலை வாய்ப்பு வழங்குவதாக மோசடி செய்து சந்தியாவிடம் பணத்தை ஏமாற்றியது தெரிந்தது

இதையடுத்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் மதன்குமார் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைதுசெய்து நேற்று அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story