அரசு வேலை வாங்கித்தருவதாக காவலாளியிடம் ரூ.6¾ லட்சம் மோசடி
அரசு வேலை வாங்கித்தருவதாக காவலாளியிடம் ரூ.6½ லட்சம் மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
குறைதீர்வு கூட்டம்
வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார்.
மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் மனுக்கள் அளித்தனர். பெறப்பட்ட 33 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார். இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் பாஸ்கரன், கவுதமன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
வேலூர் தனியார் மருத்துவமனையில் காவலாளியாக பணியாற்றி வரும் பழனி என்பவர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
அரசு வேலை
விரிஞ்சிபுரத்தை சேர்ந்த ஒருவர் தன்னை ஒரு அரசியல் கட்சியை சேர்ந்தவர் என்று என்னிடம் அறிமுகப்படுத்திக் கொண்டார். பின்னர் கல்வித்துறையில் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும், எனது மகனுக்கு பணி வாங்கி தருவதாகவும் தெரிவித்தார். இதையடுத்து நான் எனது மகனுக்கு வேலை பெறுவதற்காக அவர் கூறியதை நம்பி முதலில் ரூ.3 லட்சம் கொடுத்தேன். பின்னர் அவர் அதிகாரிகளை சந்திக்க வேண்டும் என்று கூறி பலமுறை பணம் பெற்றார். நான் எனது வீட்டை அடமானம் வைத்து பணம் கொடுத்தேன்.
ஆனால் வேலை வாங்கித்தரவில்லை. இதனால் பணத்தை திருப்பி கேட்டேன். பணத்தை திரும்ப தரவில்லை. இதுகுறித்து கேட்டால் மிரட்டல் விடுகிறார். நான் இழந்த ரூ.6¾ லட்சத்தை மீட்டு கொடுத்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் கூறியிருந்தார். மேலும் பலர் பணமோசடி, நிலமோசடி, குடும்ப தகராறு தொடர்பாக மனு அளித்திருந்தனர்.