மருந்துப்பொருளை தருவதாக கூறிவிழுப்புரம் மருந்து விற்பனை நிறுவனத்திடம் ரூ.7½ லட்சம் மோசடி
மருந்துப்பொருளை தருவதாக கூறி விழுப்புரம் மருந்து விற்பனை நிறுவனத்திடம் ரூ.7½ லட்சத்தை மோசடி செய்த மகாராஷ்டிரா தனியார் நிறுவனம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மருந்து விற்பனை நிறுவனம்
கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா கோட்டலாம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (வயது 32). இவர் விழுப்புரத்தில், மருத்துவமனைகளில் பயன்படுத்தும் மருந்து விற்பனை நிறுவனம் ஒன்றில் நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இவர், தான் பணியாற்றும் நிறுவனத்திற்கு 5 லிட்டர் மருந்து வாங்குவதற்காக மகாராஷ்டிரா மாநிலம் தானே கோப்ரி காலனி பகுதியில் உள்ள ஒரு தனியார் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தை அணுகினார். பின்னர் அந்நிறுவனத்தின் பெயரில் உள்ள வங்கி கணக்கிற்கு கிருஷ்ணகுமாரின் நிறுவன வங்கி நடப்பு கணக்கில் இருந்து ரூ.7 லட்சத்து 44 ஆயிரத்து 995-ஐ கடந்த 30.3.2023 அன்று அனுப்பி வைத்துள்ளனர்.
ரூ.7½ லட்சம் மோசடி
பணத்தை பெற்றுக்கொண்டதாக ஒப்புக்கொண்ட மகாராஷ்டிரா தனியார் நிறுவனத்தினர், விழுப்புரம் மருந்து விற்பனை நிறுவனத்திடம் நீங்கள் கேட்ட 5 லிட்டர் மருந்தை மறுநாள் பெற்றுக்கொள்ளலாம் என்று குறுஞ்செய்தி அனுப்பினர். ஆனால் மறுநாள் மருந்து வராததால் அந்நிறுவனத்தை விழுப்புரம் மருந்து விற்பனை நிறுவனத்தினர் பலமுறை தொடர்பு கொண்டபோதிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. மகாராஷ்டிரா தனியார் நிறுவனத்தினர் பணத்தை பெற்றுக்கொண்டு மருந்துப்பொருளை கொடுக்காமல் ஏமாற்றி மோசடி செய்து விட்டனர்.இதுகுறித்து கிருஷ்ணகுமார், மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் மகாராஷ்டிரா தனியார் நிறுவனம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.