பெற்றோரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.7 லட்சம் மோசடி


பெற்றோரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.7 லட்சம் மோசடி
x
தினத்தந்தி 18 Jun 2023 1:00 AM IST (Updated: 18 Jun 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon

மாணவர்களுக்க கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி அவர்களது பெற்றோரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.7 லட்சம் மோசடி செய்த நாமக்கல்லை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோயம்புத்தூர்


மாணவர்களுக்க கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி அவர்களது பெற்றோரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.7 லட்சம் மோசடி செய்த நாமக்கல்லை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

கல்வி உதவித்தொகை

பிளஸ்-2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகள் மேற்படிப்பிற்கு விண்ணப்பித்து உள்ளனர். இவர்களில் பலர் கல்வி உதவித்தொகை கோரி விண்ணப்பித்து இருந்தனர்.

அவர்களை குறி வைத்து அரசின் கல்வி உதவித்தொகை பிரிவில் இருந்து பேசுவதாக கூறி ஒரு கும்பல் மோசடியை அரங்கேற்றியது. அந்த கும்பலிடம் பணத்தை இழந்தவர்கள், கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர்.

இது குறித்து இன்ஸ்பெக்டர் அருண் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து நாமக்கலை சேர்ந்த 5 பேர் கும்பலை கைது செய்த னர். இது குறித்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

பண மோசடி

பிளஸ்-2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. படித்து முடித்த மாணவர்களின் விவரங்களை சேகரித்து அவர்களின் பெற்றோர்களை வாட்ஸ்அப் கால் மூலம் ஒரு கும்பல் தொடர்பு கொண்டு பேசியது.

அப் போது அந்த கும்பல், மாணவர்களின் பெற்றோரிடம் உங்களது மகன் அல்லது மகளுக்கு கல்வி உதவித்தொகையை அரசு அனு மதித்து உள்ளது. அதை பணத்தை பெற நாங்கள் அனுப்பும் கியூ ஆர்கோடை நீங்கள் ஸ்கேன் செய்ய வேண்டும் என்று கூறி உள்ளனர்.

அதை நம்பிய பெற்றோர் சிலர், அந்த கும்பல் அனுப்பிய கியூஆர் கோடை தொட்டு அழுத்தி உள்ளனர்.

உடனே அவர்களின் வங்கிக் கணக்கில் இருந்த பணம் முழுவதும் ஆன்லைன் முறையில் மற்றொரு வங்கிக்கணக்கிற்கு சென்றது. இதை அறிந்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த முறையை பயன்படுத்தி கோவையை சேர்ந்த 7 மாணவர்களின் பெற்றோரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.7 லட்சம் மோசடி செய்து உள்ளனர்.

5 பேர் கைது

இதுகுறித்த புகார்களின் பேரில் சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த மோசடியில் நாமக்கல் மாவட்டம் சவுரிபாளையத்தை சேர்ந்த டேவிட் (வயது 32), லாரன்ஸ்ராஜ் (28), ஜேம்ஸ் (30), எட்வின் சகாயராஜ் (31), மாணிக்கம் (34) ஆகிய 5 பேர் ஈடுபட்டது தெரிய வந்தது. உடனே அவர்கள் 5 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த கும்பலிடம் இருந்து 44 செல்போன்கள், 22 சிம்கார்டுகள், 7 ஏ.டி.எம். கார்டுகள், 1 காசோலை, 7 வங்கி கணக்கு புத்தகங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டது.

இதில் வங்கி கணக்குகள் மற்றும் சிம்கார்டு ஆகியவற்றை டெல்லி முகவரியில் வாங்கி உள்ளனர். முதற்கட்ட விசாரணையில் அவர்கள் தமிழகம் முழுவதும் 500 பேரிடம் நூதன முறையில் பண மோசடி செய்து இருக்கலாம் என்பது தெரிய வந்து உள்ளது. அது குறித்து விரிவாக விசாரணை நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைதொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு மோசடி கும்பலை கைது செய்த சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண் மற்றும் போலீசாருக்கு போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். கைதான 5 பேரும் கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.



Next Story