முதியவரிடம் ரூ.70 ஆயிரம் மோசடி
வங்கி மேலாளர் பேசுவது போல் பேசி ஏ.டி.எம். கார்டை புதுப்பிக்க வேண்டும் என்று கூறி முதியவரிடம் ரூ.70 ஆயிரம் மோசடி செய்தவர் மீது சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வங்கி மேலாளர் பேசுவது போல் பேசி ஏ.டி.எம். கார்டை புதுப்பிக்க வேண்டும் என்று கூறி முதியவரிடம் ரூ.70 ஆயிரம் மோசடி செய்தவர் மீது சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விவசாயி
சிவகங்கை மாவட்டம் கீழடி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 65). விவசாயி. கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவரது செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய ஒருவர் தான் வங்கி மேலாளர் பேசுவதாகவும் அவரது ஏ.டி.எம். கார்டு காலாவதியாகி விட்டதால் அதை புதுப்பிக்க வேண்டும் என்று கூறி வங்கி கணக்கு விவரங்களை கேட்டுள்ளார்.
இதை உண்மை என்று நம்பிய ஆறுமுகம் அவர் கேட்ட விவரங்களை கொடுத்துள்ளார்.
ஓ.டி.பி.எண் பரிமாற்றம்
அதன் பின்னர் அவரது செல்போனுக்கு வந்த ஓ.டி.பி. எண்ணையும் அந்த நபர் கேட்டு பெற்றுள்ளார். இதன் பின்னர் சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.70 ஆயிரம் எடுக்கப்பட்டு விட்டதாக தகவல் வந்ததாம்.
இதைத் தொடர்ந்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ஆறுமுகம் இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜிடம் புகார் செய்தார். அவரது உத்தரவின் பேரில் சிவகங்கை மாவட்ட சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் தேவி விசாரணை நடத்தி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். விசாரணையில் ஆறுமுகத்துடன் பேசிய செல்போன் நம்பர் மேற்கு வங்காளத்தில் இருந்து பேசப்பட்டது என்று தெரிந்துள்ளது. இது குறித்து போலீசார் கூறும் போது, பலர் வங்கி மேலாளர் பேசுவதாக கூறி இது போன்ற மோசடியில் ஈடுபடுகிறார்கள். எக்காரணத்தை கொண்டும் யாரிடமும் வங்கி தொடர்பான பணபரிவர்த்தனை ஓ.டி.பி. எண்ணை பரிமாற்றம் செய்து கொள்ளாதீர்கள். விழிப்புணர்வுடன் இருந்தால் தான் பணத்தை ஏமாறாமல் பாதுகாக்க முடியம் என்றனர்.