வீடு கட்டி தருவதாக கூறி ரூ.76 லட்சம் மோசடி


வீடு கட்டி தருவதாக கூறி ரூ.76 லட்சம் மோசடி
x
தினத்தந்தி 19 July 2023 4:00 AM IST (Updated: 19 July 2023 4:01 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் வீடு கட்டி தருவதாக கூறி 16 பேரிடம் ரூ.76 லட்சம் மோசடி செய்த தனியார் நிறுவன நிர்வாக இயக்குனரை போலீசார் கைது செய்தனர்.

கோயம்புத்தூர்

சாய்பாபா காலனி

கோவையில் வீடு கட்டி தருவதாக கூறி 16 பேரிடம் ரூ.76 லட்சம் மோசடி செய்த தனியார் நிறுவன நிர்வாக இயக்குனரை போலீசார் கைது செய்தனர்.

இந்த மோசடி குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பணம் கொடுத்தனர்

கோவை சாய்பாபாகாலனி ராஜா அண்ணாமலை ரோட்டில் தனியார் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக விஜயகுமார் என்பவர் உள்ளார். இந்த நிறுவனம் சார்பில் குறைந்த விலைக்கு நிலம் வாங்கி கொடுப்பதுடன் அதில் வீடும் கட்டிக்கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து கோவையை சேர்ந்த ஓய்வுபெற்ற ரெயில்வே அதிகாரி ராஜாமணி (வயது 62) உள்பட பலர் கடந்த 2019-ம் ஆண்டில் அங்கு சென்று பணத்தை கொடுத்தனர். அதற்கு விஜயகுமார் உள்பட 3 பேர் பணத்தை பெற்று விரைவில் நிலமும் வீடும் கொடுக்கப்படும் என்று கூறினார்கள்.

போலீசில் புகார்

ஆனால் 4 ஆண்டுகள் ஆகியும் அவர்களுக்கு நிலமோ அல்லது அதில் வீடோ கட்டிக்கொடுக்கவில்லை. பணம் செலுத்தியவர்கள் பலமுறை அந்த நிறுவனத்துக்கு சென்று கேட்டபோதும் எவ்வித பதிலும் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து பணம் செலுத்தி ஏமாற்றப்பட்டவர்கள் சாய்பாபாகாலனி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விஜயகுமார் உள்ளிட்ட 3 பேரையும் அழைத்து விசாரணை நடத்தினார்கள். அதற்கு அவர்கள் விரைவில் பணத்தை கொடுத்துவிடுவதாக தெரிவித்தனர். ஆனால் கொடுக்கவில்லை.

நிர்வாக இயக்குனர் கைது

இதை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விஜயகுமார் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அதில் அவர்கள் 16 பேரிடம் ரூ.76 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் விஜயகுமரை நேற்று கைது செய்தனர். தொடர்ந்து தலைமறைவாக உள்ள மற்ற 2 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.


Next Story