கடன் வாங்கி தருவதாக விவசாயி உள்பட 3 பேரிடம் ரூ.8 லட்சம் மோசடி-சைபர் கிரைம் போலீசார் விசாரணை


கடன் வாங்கி தருவதாக விவசாயி உள்பட 3 பேரிடம் ரூ.8 லட்சம் மோசடி-சைபர் கிரைம் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 3 Feb 2023 12:15 AM IST (Updated: 3 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கடன் வாங்கி தருவதாக கூறி, விவசாயி உள்பட 3 பேரிடம் ரூ.8 லட்சம் மோசடி செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நீலகிரி

ஊட்டி

கடன் வாங்கி தருவதாக கூறி, விவசாயி உள்பட 3 பேரிடம் ரூ.8 லட்சம் மோசடி செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விவசாயி

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் வங்கி கடன் பெறுவதற்காக பொதுத்துறை வங்கி உள்பட பல்வேறு இடங்களுக்கு சென்று வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் செல்போன் மற்றும் வாட்ஸ்-அப் மூலம் அவரை தொடர்பு கொண்டு கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள 'தனலட்சுமி லோன் லிமிடெட்' என்ற நிறுவனத்தில் இருந்து ரூ.10 லட்சம் தருவதாக கூறியுள்ளனர். இதனால் மகிழ்ச்சியடைந்த விவசாயி அந்த தனியார் நிதி நிறுவனத்திற்கு நேரில் வருவதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் உடனடியாக நேரில் வர வேண்டாம் என்றும், கடன் தொகையை பெறுவதற்கு ஆவண கட்டணம் ரூ.10 ஆயிரம் செலுத்த வேண்டும் என கூறி பெற்று உள்ளனர். இதையடுத்து ரூ.10 லட்சம் கடன் தொகை வழங்குவதற்கான ஆணையை தயார் செய்து அவருக்கு வாட்ஸ்- அப் மூலம் அனுப்பி உள்ளனர். ஆனால் வங்கி கணக்குக்கு பணம் வராததால், விவசாயி இது குறித்து அவர்களிடம் கேள்வி கேட்டுள்ளார்.

போலீசில் புகார்

இதேபோல் இன்சூரன்ஸ் கட்டணம் உள்பட பல்வேறு காரணங்களை கூறி விவசாயியிடம் இருந்து ஒவ்வொரு முறையும் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரை பல்வேறு தவணைகளில் ரூ.6 லட்சத்து 72 ஆயிரத்து 810 வாங்கியுள்ளனர். ஒவ்வொரு முறையும் இந்த பணம் முழுவதும் கடன் தொகையுடன் மொத்தமாக கிடைத்துவிடும் என்று நம்பிக்கை அளித்ததால், விவசாயியும் பணத்தை கொடுத்து வந்துள்ளார். மேலும் விவசாய கடனுக்கு என்பதால் குறைந்த வட்டி என்றும் அவர்கள் ஆசை வார்த்தை கூறியதால் விவசாயி இவ்வளவு தொகையை செலுத்தி விட்டார். ஒரு கட்டத்தில் கடன் தொகை தனக்கு வந்து சேராததால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் நிதி நிறுவன அதிகாரிகளை செல்போனில் தொடர்பு கொள்ள முயற்சித்த போது அந்த செல்போன் எண்கள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயி ஊட்டி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் நீலகிரி மாவட்டத்தில் ஊட்டியை சேர்ந்த ஒரு பெண்ணிடம் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம், மேலும் ஒரு வாலிபரிடம் ரூ.17 ஆயிரம் என மோசடி பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

நிதி நிறுவனம் இல்லை

இந்த நிலையில் விசாரணைக்காக சைபர் கிரைம் போலீசார் கேரள மாநிலம் எர்ணாகுளம் சென்றபோது, குறிப்பிட்ட முகவரியில் தனியார் நிதி நிறுவனம் எதுவுமில்லை. இதையடுத்து கூடுதல் விசாரணையில் மோசடி பேர்வழிகள் டெல்லியில் இருந்து போன் செய்தும், வாட்ஸ் -அப் மூலம் தொடர்பு கொண்டும் இந்த சம்பவத்தை அரங்கேற்றியது தெரியவந்தது.


கோவை உள்பட தமிழகம் முழுவதும் மோசடி

சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:- நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 3 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் மேலும் பலரும் ஏமாந்து இருக்கலாம் என்று தெரிகிறது. கூடிய விரைவில் நிறைய புகார்கள் வரலாம். இதே போல் கோவை, விழுப்புரம் உள்பட தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இந்த மோசடி நடந்துள்ளது தெரியவந்துள்ளது.எனவே பாதிக்கப்பட்ட பொதுமக்கள் இது குறித்து புகார் அளிக்கலாம்.

ஏற்கனவே அளிக்கப்பட்ட புகாரின் பேரில் விசாரணை நடத்தியதில், டெல்லியில் உள்ள ஆசாமிகள் இந்த மோசடி செயலை அரங்கேற்றியுள்ளனர். ஆனால் அவர்கள் சந்தேகம் ஏற்படாத அளவுக்கு, தூய தமிழிலும், சில நேரங்களில் கொங்கு தமிழிலும் பேசுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.


டெல்லி விரையும் தனிப்படை

சைபர் கிரைம் குற்றத்தை பொருத்தவரை குற்றவாளிகள் சிக்குவதில்லை என்ற தைரியத்தில் மோசடி செயல்களை தொடர்ந்து செய்து கொண்டே இருக்கின்றனர். எனவே இவர்களை கைது செய்வதற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் உத்தரவின் பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மோகன் நிவாஸ் தலைமையில் இன்ஸ்பெக்டர் பிலிப்ஸ் சப் -இன்ஸ்பெக்டர் கலைவாணி உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அதனால் இந்த தனிப்படை விரைவில் டெல்லிக்கு செல்ல உள்ளது.


Next Story