பகுதி நேர வேலை தருவதாக இளம்பெண்ணிடம் ரூ.9 லட்சம் மோசடி
வாணியம்பாடியில் பகுதி நேர வேலை தருவதாக இளம்பெண்ணிடம் ரூ.8 லட்சத்து 87 ஆயிரம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
இளம்பெண்
வாணியம்பாடி பகுதியை சேர்ந்தவர் அப்துல்கபூர் மகள் நபிஷா குல்சும் (வயது 23). இவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் 28-ந் தேதி சமூக வலைதளத்தில் இருந்து ஒரு குறுந்தகவல் வந்துள்ளது. அதில் பகுதி நேரமாக வேலை உள்ளதாகவும், அதன் மூலம் வீட்டில் இருந்து பணம் சம்பாதிக்கலாம் என இருந்தது.
இதனை நம்பிய நபிஷா குல்சும் அந்த லிங்கில் தனது சுயவிவரங்கள், வங்கி கணக்குகள் உள்பட அனைத்து விவரங்களையும் அளித்துள்ளார். அதன் பின் அவரது செல்போனுக்கு ஒரு டாஸ்க் வந்துள்ளது. அதில் இந்தியாவில் உள்ள நட்சத்திர ஓட்டல்களின் லிங்குகளை அனுப்பி அந்த ஓட்டல்களின் தரங்கள் குறித்து ஸ்டார் மதிப்பெண்கள் அளிக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கொடுத்தால் ரூ.100 முதல் ரூ.190 வரை கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.
மோசடி
அந்த டாஸ்கின்படி நபிஷா குல்சும் ஸ்டார் மதிப்பெண்கள் கொடுத்துள்ளார். அதன்பிறகு சமூக வலைதளம் மூலம் ஒரு லிங்கை அனுப்பி அதில் உள்ள வங்கி கணக்கிற்கு பணம் செலுத்தினால் கூடுதலாக பணம் தருவதாக கூறியுள்ளனர். அதை நம்பி நபிஷா குல்சும் பல தவணைகளாக பணத்தை செலுத்தியுள்ளார். இவ்வாறு அவர் ரூ.8 லட்சத்து 87 ஆயிரத்து 871 செலுத்தி உள்ளார். பின்னர் கூடுதல் பணம் வரவில்லை என நபிஷா குல்சும் அந்த நபர்களிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் இன்னும் கூடுதலாக பணம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளனர்.
இதையடுத்து தான் ஏமாற்றப்படுவதாக அறிந்த நபிஷா குல்சும் திருப்பத்தூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் நேற்று புகார் அளித்தார். அதன்பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் இதேபோல் பல நபர்கள் ஏமாற்றப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.