என்ஜினீயரிடம் ரூ.9¼ லட்சம் மோசடி
வீடியோக்களை ‘ரிவியூ’ செய்தால் அதிக பணம் தருவதாக கூறி கோவை என்ஜினீயரிடம் ரூ.9¼ லட்சம் மோசடி செய்யப்பட்டது.
வீடியோக்களை 'ரிவியூ' செய்தால் அதிக பணம் தருவதாக கூறி கோவை என்ஜினீயரிடம் ரூ.9¼ லட்சம் மோசடி செய்யப்பட்டது.
என்ஜினீயர்
கோவை ரத்தினபுரி விஸ்வந்தபுரத்தை சேர்ந்தவர் மனோகரன் (வயது 27). இவர் தனியார் செல்போன் நிறுவனத்தில் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். அவரது வாட்ஸ் எண்ணிற்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் ஆன்லைன் மூலம் பகுதி நேர வேலை வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
உடனே அவர் அந்த குறுஞ்செய்தியில் உள்ள லிங் மூலம் தனது விபரங்களை பதிவு செய்தார்.
இதையடுத்து அவரை, ஒரு நபர் தொடர்பு கொண்டார். அவர் தனது பெயர் சந்திரா என்றும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிவதாகவும், தங்களது நிறுவனம் சார்பில் கொடுக்கப்படும் பணிகளை ஆன்லைன் மூலம் செய்து கொடுத்தால், பணம் கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.
அதை நம்பிய மனோகரன், தான் அந்த ஆன்லைன் வேலைகளை செய்து தருவதாக தெரிவித்தார். பின்னர் அந்த நபர் அனுப்பிய சில யூடியூப் வீடியோக்களுக்கு மனோகரன் லைக் செய்து ரிவியூ செய்தார்.
இதற்கு அவருக்கு ஒரு வீடியோவிற்கு ரூ.150 வீதம் பணம் கிடைத்தது.இதன்பின்னர் மனோகரனை தொடர்பு கொண்ட அந்த நபர் இனி வழங்கப்படும் பணிகளுக்கு முதலில் பணம் செலுத்த வேண்டும்.
அதன்பிறகு தான் பணம் திரும்ப கிடைக்கும் என்று தெரிவித்தார்.அதைத்தொடர்ந்து மனோகரன் ரூ.1,000 முதலீடு செய்து, அவர் கள் கொடுத்த பணியை செய்து முடித்தார்.
இதற்கு அவருக்கு கமிஷனாக ரூ.1,390 கிடைத்தது. இதன்பின்னர் மனோகரன் ரூ.7 ஆயிரம் முதலீடு செய்தார். இதற்கு லாபமாக ரூ.9,890 கிடைத்தது.
வழக்கு பதிவு
இதையடுத்து மனோகரனுக்கு லாபத்தொகை முறையாக கிடைக்க வில்லை. இதனால் அவர் சந்திராவை தொடர்பு கொண்டார்.
அப்போது சந்திரா ரூ.5 லட்சம் பணம் செலுத்தினால் தான் மீதி தொகை கிடைக்கும் என்ற ஆசை வார்த்தை கூறினார். இதை நம்பிய அவர் ரூ.5 லட்சம் செலுத்தி உள்ளார்.
அதைத்தொடர்ந்து பல்வேறு கட்டங்களாக ரூ.9 லட்சத்து 20 ஆயிரத்து 408 முதலீடு செய்தார். ஆனால் அவருக்கு பணம் எதுவும் திரும்ப கிடைக்கவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், சந்திராவை தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் அவரது செல்போன் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
இது குறித்த புகாரின் பேரில் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.