பகுதிநேர வேலை தருவதாக வாலிபரிடம் ரூ.95 ஆயிரம் மோசடி
திருப்பத்தூரில் பகுதிநேர வேலை தருவதாக வாலிபரிடம் ரூ.95 ஆயிரம் மோசடி செய்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்துரை சேர்ந்தவர் நவீன் (வயது 23). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது செல்போன் எண்ணுக்கு கடந்த மாதம் 21-ந் தேதி ஒரு குறுந்தகவல் வந்துள்ளது. அதில் பகுதி நேர வேலை உள்ளதாகவும், அதன் மூலம் வீட்டிலிருந்து பணம் சம்பாதிக்கலாம் எனவும் தகவல் இருந்தது. இதனை நம்பிய நவீன் அந்த லிங்கில் சென்று தனது சுயவிவரங்கள், வங்கி கணக்குகள் உள்பட அனைத்து விவரங்களையும் கொடுத்துள்ளார்.
அதன் பின் இந்தியாவில் உள்ள நட்சத்திர ஓட்டல்களின் லிங்குகளை அனுப்பி அந்த ஓட்டல்களின் தரங்கள் குறித்து ஸ்டார் மதிப்பெண்கள் அளிக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கொடுத்தால் ரூ.100 முதல் ரூ.150 வரை கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.
அதன்படி நவீன் ஸ்டார் மதிப்பெண்கள் கொடுத்துள்ளார். அதன் பிறகு ஒரு லிங்கை அனுப்பி அதில் உள்ள வங்கி கணக்கிற்கு பணம் செலுத்தினால் கூடுதலாக பணம் தருவதாக கூறியுள்ளனர். அதை நம்பி 4 தவணைகளாக ரூ.95 ஆயிரம் செலுத்தியுள்ளார். ஆனால் கூடுதல் பணம் வரவில்லை. இதுகுறித்து நவீன் அந்த நபர்களிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் நீங்கள் இன்னும் ரூ.1½ லட்சம் செலுத்தினால் ரூ.3 லட்சம் தருகிறோம் என கூறியுள்ளனர்.
இதையடுத்து தான் ஏமாற்றப்படுவதை அறிந்ததும், இதுகுறித்து அவரது தந்தை சரவணன் திருப்பத்தூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.