போலி நகை கொடுத்து ரூ.10 லட்சம் மோசடி


போலி நகை கொடுத்து ரூ.10 லட்சம் மோசடி
x
தினத்தந்தி 16 Sept 2022 12:15 AM IST (Updated: 16 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

புதையலில் கிடைத்தது என்றுகூறி போலி நகையை கொடுத்து ரூ.10 லட்சம் மோசடி செய்து விட்டதாக 2 வாலிபர்கள் மீது வியாபாரி புகார் செய்தார்.

கோயம்புத்தூர்

புதையலில் கிடைத்தது என்றுகூறி போலி நகையை கொடுத்து ரூ.10 லட்சம் மோசடி செய்து விட்டதாக 2 வாலிபர்கள் மீது வியாபாரி புகார் செய்தார்.

வியாபாரி

கோவையை அடுத்த கருமத்தம்பட்டி வாகராயம்பாளையத்தை சேர்ந்தவர் சதாசிவம் (வயது 48). வியாபாரி. இவர், கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணனிடம் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:-

எனது கடைக்கு பொருட்கள் வாங்க அடிக்கடி வரும் வாலிபர் ஒருவர் தனது நண்பருடன் வந்தார்.

அவர்கள், கோவையில் ஒரு கல்லூரியில் படித்து வருவதாகவும், விடுமுறை நாட்களில் வீட்டுக்கு அஸ்திவாரம் தோண்டும் வேலைக்கு சென்ற போது புதையலாக 1 கிலோ தங்க நகை கிடைத்ததாகவும் கூறினர்.

எங்களுக்கு கல்லூரி கட்டணம் செலுத்த வேண்டி இருப்பதால் புதையலில் கிடைத்த ஒரு கிலோ தங்க நகையை ரூ.10 லட்சத்துக்கு விற்க விரும்புவதாக கூறினர். அதை நம்பி, நானே வாங்கிக் கொள்கிறேன்.

ஒரு வாரம் கழித்து வாருங்கள் என்று கூறினேன்.அதன் படி அவர்கள், புதையலில்கிடைத் தது என்று சிறிய நகையை என்னிடம் கொடுத்தனர். அதை பரிசோதித்தபோது தங்கம் என்பது தெரியவந்தது.

ரூ.10 லட்சம் மோசடி

இதையடுத்து ஒரு வாரம் கழித்து வந்த அவர்கள் என்னிடம் ரூ.10 லட்சம் வாங்கிக் கொண்டு தங்க நகையை கொடுத்தனர். பணத்தை வாங்கியதும் அவர்கள், இதை யாரிடமாவது சொன்னால் அரசு அதிகாரிகள் வந்து வாங்கிச் சென்று விடுவார்கள் என்று கூறிவிட்டு சென்றனர்.

இதைத்தொடர்ந்து அந்த வாலிபர்கள் கொடுத்த நகைகளை பரிசோதனை செய்து பார்த்த போது அவை போலி நகை என்பதும், தன்னை ஏமாற்றி அவர்கள் ரூ.10 லட்சத்தை மோசடி செய்து விட்டு தப்பி சென்றதும் தெரிய வந்தது.

அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story