தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.14½ லட்சம் மோசடி
பகுதிநேர வேலையில் கூடுதல் கமிஷன் தருவதாக கூறி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.14½ லட்சம் மோசடி செய்தது குறித்து கோவை சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை
பகுதிநேர வேலையில் கூடுதல் கமிஷன் தருவதாக கூறி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.14½ லட்சம் மோசடி செய்தது குறித்து கோவை சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த மோசடி குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தனியார் நிறுவன ஊழியர்
கோவையை அடுத்த இருகூர் தீபம் நகரை சேர்ந்தவர் சதீஷ் (வயது 31). இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவருடைய வாட்ஸ்-அப்புக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில் பகுதி நேர வேலையில் அதிகளவில் சம்பாதிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
உடனே அவர் அதில் உள்ள எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசினார். மறுமுனையில் பேசிய நபர், நீங்கள் எங்கள் நிறுவன இணையதளத்தை பின்தொடர வேண்டும். அவ்வாறு பின்தொடர்ந்தால் பணம் கிடைக்கும் என்று கூறினார். இதையடுத்து சதீஷ், அந்த நிறுவனத்தின் இணையதளத்தை பின்தொடர்ந்தார்.
ரூ.14½ லட்சம் மோசடி
சில நிமிடங்களில் சதீசின் வங்கி கணக்குக்கு ரூ.150 வந்தது. பின்னர் டெலிகிராம் செயலியில் சிலவற்றை கொடுத்து அதற்கு மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் அதற்கு பணம் செலுத்தினால் கூடுதல் கமிஷன் கிடைக்கும் என்றும் கூறினார். இதையடுத்து சதீஷ் முதலில் ரூ.1000 செலுத்தினார். அதற்கு ரூ.1300 கிடைத்தது. பின்னர் ரூ.5 ஆயிரம் செலுத்தினார். அதற்கு ரூ.6,500 கிடைத்தது.
தொடர்ந்து ரூ.21 ஆயிரத்து 800 செலுத்தினார். அதற்கு கமிஷனுடன் சேர்த்து ரூ.31 ஆயிரத்து 800 கிடைத்தது. பின்னர் கடந்த 10-ந் தேதி முதல் சிறிது சிறிதாக ரூ.14 லட்சத்து 45 ஆயிரத்து 800 செலுத்தினார். ஆனால் அதற்கான பணத்தையோ அல்லது கமிஷனையோ கொடுக்காமல் மோசடி செய்துவிட்டனர்.
போலீசார் விசாரணை
இந்த மோசடி குறித்து சதீஷ் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீசிடம் மோசடி செய்த நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.