பெண் என்ஜினீயர் உள்பட 2 பேரிடம் ரூ.15¾ லட்சம் மோசடி
கோவையில் பெண் என்ஜினீயர் உள்பட 2 பேரிடம் ரூ.15¾ லட்சம் மோசடி செய்யப்பட்டது. இந்த தொகையை போலீசார் மீட்டு கொடுத்தனர்.
கோவை
கோவையில் பெண் என்ஜினீயர் உள்பட 2 பேரிடம் ரூ.15¾ லட்சம் மோசடி செய்யப்பட்டது. இந்த தொகையை போலீசார் மீட்டு கொடுத்தனர்.
இதுகுறித்து கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:-
பெண் என்ஜினீயர்
கோவை வடவள்ளியை சேர்ந்தவர் ஜெகதீஸ்வரி, என்ஜினீயர். இவர் சென்னையில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் ஜெகதீஸ்வரி ஆன்லைனில் பகுதிநேர வேலை எதுவும் உள்ளதா என்று பார்த்து வந்தார்.
அப்போது பகுதிநேர வேலை உள்ளதாக வந்த லிங்கை கிளிக் செய்தார். இதையடுத்து அவர் வேலை செய்தற்கு உடனுக்குடன் ரூ.1000, ரூ.1500 என கமிஷன் வழங்கப்பட்டது. ஒரு கட்டத்தில் தொடர்ந்து பணி செய்தததால், உங்களுக்கு லட்சக்கணக்கில் கமிஷன் வந்துள்ளது. அந்த பணத்தை பெற வருமான வரி கட்டணம் செலுத்துமாறு கூறினர். இதனை நம்பிய ஜெகதீஸ்வரி அவர்கள் அனுப்பிய வங்கி கணக்கிற்கு ரூ.8 லட்சத்து 60 ஆயிரத்தை அனுப்பினார். ஆனால்அவர்கள் கூறியபடி கமிஷன் தொகையை அனுப்பவில்லை. மேலும் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ஜெகதீஸ்வரி இதுகுறித்து கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் உத்தரவின்பேரில், இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து, மோசடி கும்பலின் வங்கி கணக்கை முடக்கி இந்த தொகையை மீட்டனர்.
மோசடி
இதேபோல் வேடப்பட்டியை சேர்ந்த சுரேஷ் என்பவர், தனது வீட்டை வாடகைக்கு விடுவதாக ஆன்லைன் மூலம் தகவல் வெளியிட்டு இருந்தார். இதனை பார்த்த மர்ம நபர் சுரேசை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது உடனே அட்வான்ஸ் தொகையை செலுத்துவதாக தெரிவித்தார்.
மேலும் அந்த மர்ம நபர், சுரேசிடம் உங்கள் வங்கி கணக்கில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை அனுப்பினால் அதனை அட்வான்ஸ் தொகையுடன் சேர்த்து அனுப்புவதாக தெரிவித்தார். இதனை நம்பிய சுரேஷ் பல்வேறு தவணையாக ரூ.7 லட்சத்து 24 ஆயிரம் அனுப்பினார். பின்னர் அந்த நபரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் மோசடி செய்யப்பட்டதை அறிந்த சுரேஷ் இதுகுறித்து மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இதனைத்தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார், மோசடி செய்த கணக்கில் இருந்து ரூ.3 லட்சத்து 66 ஆயிரத்தை மீட்டனர்.
இந்த தொகைக்கான காசோலையை ஜெகதீஷ்வரி, சுரேஷ் ஆகியோருடன் போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் வழங்கினார்.
புகார் அளிக்கலாம்
பொதுமக்கள் ஆன்லைன் மூலம் பணத்தை இழந்துவிட்டால் உடனடியாக 1930 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்றும், சைபர் கிரைம் புகார்களுக்கு www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்ய வேண்டும் என்றும் போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.