நிதி நிறுவனம் நடத்தி ரூ.20 கோடி மோசடி
கோவையில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.20 கோடி மோசடி செய்ததுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை
கோவையில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.20 கோடி மோசடி செய்ததுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் கூறியதாவது:-
ரூ.20 கோடி மோசடி
கோவை நியுசித்தாபுதூர் பாரதியார் ரோட்டில், "டெய்லி மேக்ஸ் கேபிடல்" என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இதன் இயக்குனராக செந்தில்குமார், அவருடைய மனைவி லலிதா, கோகுல், பாலு, நாகராஜ், ஆனந்தராஜன் ஆகியோர் பங்குதாரர்களாகவும் செயல்பட்டனர். பொதுமக்களிடம் இருந்து அதிக வட்டி தருவதாக முதலீடு பெற்றுள்ளனர். ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், 90 நாட்களில் ரூ.2 லட்சம் தருவதாக கூறி ஆசை வார்த்தை காண்பித்துள்ளனர். இதனை நம்பி 1,500-க்கும் மேலானவர்கள் ரூ.20 கோடிக்கும் மேல் முதலீடு செய்துள்ளனர். ஆனால் முதலீட்டு தொகை மற்றும் வட்டி தொகை ஆகியவற்றை திருப்பி கொடுக்கவில்லை. இந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்து வருகிறார்கள்.
2 பேர் கைது
இந்த நிலையில் மோசடி நிறுவனத்தின் பங்குதாரர்களாக செயல்பட்ட கோவை ஆவாரம்பாளையத்தை சேர்ந்த ஆனந்தராஜன், கோவை கணபதி வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த கோகுல் (வயது47)ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் இந்த 2 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தநிறுவன மோசடி தொடர்பாக கடந்த 2020-ம் ஆண்டு நிறுவன இயக்குனர் செந்தில்குமார் மற்றும் அவருடைய மனைவி லலிதா ஆகியோர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மோசடி பணத்தில் வீடு உள்ளிட்ட ஏராளமான சொத்துக்களை வாங்கி குவித்துள்ளனர். இதுகுறித்தும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கைதான 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.