கிரைண்டர் கம்பெனியில் ரூ.25 லட்சம் மோசடி
கோவை சிங்காநல்லூரில் கிரைண்டர் கம்பெனியில் ரூ.25 லட்சம் மோசடி செய்த புகாரின் பேரில் ஊழியர்கள் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிங்காநல்லூர்
கோவை சிங்காநல்லூரில் கிரைண்டர் கம்பெனியில் ரூ.25 லட்சம் மோசடி செய்த புகாரின் பேரில் ஊழியர்கள் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மோசடி
கோவை சிங்காநல்லூர் சண்முக நகரை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 74). இவர் அந்த பகுதியில் கிரைண்டர் கம்பெனி நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவர் கோவை சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் கூறப்பட்டு உள்ளதாவது:-
எனது கம்பெனியில் ராதாகிருஷ்ணன் அவரது மனைவி மாலதி, மகன் முகுந்தன் மற்றும் ரம்யா ஆகியோர் பணிபுரிகின்றனர். இவர்கள் பல ஆண்டுகளாக எனது கம்பெனியில் பணிபுரிவதால், அனைத்து பொறுப்புகளையும் கவனித்து வந்தனர். இதனிடையே அவர்கள் வாடிக்கையாளர்களிடம் வசூல் செய்த பணத்தை கம்பெனியின் வங்கி கணக்கில் செலுத்தாமல், அவர்களின் சொந்த கணக்கில் வரவு வைத்து உள்ளனர். இவர்கள் 4 பேரும் எனது நிறுவனத்தில் ரூ.25 லட்சம் வரை மோசடி செய்து உள்ளனர்.
வீடு கட்டும் பணி
இதுகுறித்து நான் அவர்களிடம் கேட்டேன். இதையடுத்து அவர்கள் அந்த பணத்தை திரும்ப கொடுத்து விடுவதாக தெரிவித்தனர். ஆனால் அவர்கள் மோசடி செய்த பணத்தில் அவர்கள் பீடம்பள்ளியில் நிலம் வாங்கி வீடு கட்டி வருகின்றனர். இதுதவிர 25 பவுன் தங்க நகை வாங்கி உள்ளனர். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை திரும்ப பெற்று தர வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.இந்த புகாரின் பேரில் சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.