நூதன முறையில் பணம் எடுத்து ரூ.3¾ லட்சம் மோசடி
நூதன முறையில் பணம் எடுத்து ரூ.3¾ லட்சம் மோசடி
கோவை
கோவையில் வங்கி ஏ.டி.எம். எந்திரங்களில் நூதன முறையில் ரூ.3¾ லட்சம் மோசடி நடந்துள்ளது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏ.டி.எம்.எந்திரங்கள்
கோவையை சேர்ந்த தனியார் வங்கியின் மண்டல மேலாளர் ஜெயகணேசன் கோவை மாநகர் சைபர் கிரைம் போலீசில் புகார் மனு ஒன்று அளித்தார்.
அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-
எங்கள் வங்கியின் ஏ.டி.எம். மையங்கள் காந்திபுரம், பீளமேடு, ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட இடங்களில் உள்ளன. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் எங்களது வங்கி ஏ.டி.எம். மையத்திற்கு வந்த மர்ம நபர் ஒருவர் வேறு வங்கியின் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி பணம் எடுத்து உள்ளார்.
ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் வரும் நேரத்தில் அந்த எந்திரத்தை சுவிட்ச் ஆப் செய்து உள்ளார். இதன்காரணமாக ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் பாதி வந்த நிலையில் இருக்கும்.
மோசடி
அந்த பணத்தை அவர் எடுத்து கொண்ட போதிலும், எந்திரம் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டதால் அவரது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்காதது போல் காட்டும். இந்த முறையை பயன்படுத்தி அந்த நபர் 39 பண பரிவர்த்தனை மூலம் ரூ.3 லட்சத்து 73 ஆயிரத்து 500 எடுத்து மோசடி செய்து உள்ளார்.
ஒரு சில நேரங்களில் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுக்கும்போது பிரச்சினை ஏற்பட்டு மீண்டும் ஏ.டி.எம். எந்திரத்திற்குள் பணம் சென்று விட்டதாக கூறி சம்பந்தப்பட்ட வங்கியில் இருந்து பணம் பெற்று உள்ளார். இந்த நூதன மோசடி குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இந்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.