போலி பணிநியமன ஆணை வழங்கி 7 பேரிடம் ரூ.36½ லட்சம் மோசடி
குமரி மாவட்டத்தில் பத்திர பதிவுத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி போலி பணிநியமன ஆணை வழங்கி 7 பேரிடம் ரூ.36½ லட்சம் மோசடி செய்த 2 பேர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெண் ஒருவர் புகார் மனு கொடுத்தார்
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் பத்திர பதிவுத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி போலி பணிநியமன ஆணை வழங்கி 7 பேரிடம் ரூ.36½ லட்சம் மோசடி செய்த 2 பேர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெண் ஒருவர் புகார் மனு கொடுத்தார்.
பத்திர பதிவுத்துறை
கருங்கல் மங்கலகுன்று ஊராளிபற்றுவிளையை சேர்ந்தவர் ரதி (வயது 37). இவர் நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-
என் கணவர் சுதாகர் கோவையில் வேலை பார்த்து வந்தார். அப்போது 2 பேரிடம் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் 2 பேரும் எங்களிடம் நன்றாக பழகினர். பின்னர் பத்திர பதிவுத்துறையில் 50 எழுத்தர் பணியிடம் காலியாக இருப்பதாகவும், ரூ.10 லட்சம் தந்தால் அதை எங்களுக்கு பெற்று தருவதாகவும் கூறினர். மேலும் எங்களது உறவினர்களிடமும் கூறி பணம் பெற்று தந்தால் உடனே வேலை வாங்கி தருவதாகவும் கூறினர்.
போலி பணிநியமன ஆணை
இதை நம்பி நான், என் கணவர் உள்பட 7 பேர் சேர்ந்து மொத்தம் ரூ.36 லட்சத்து 50 ஆயிரத்தை 2 பேரின் வங்கி கணக்குக்கு பல தவணைகளாக செலுத்தினோம். இதை பெற்றுக் கொண்ட அவர்கள் ஒவ்வொரு தாசில்தார் அலுவலகங்களின் முத்திரைப்பதிவுடன் பணி உத்தரவு ஆணை வழங்கினார்கள். அந்த பணி ஆணையை பெற்றுக் கொண்டு சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு சென்று பார்த்த போது 2 பேரும் வழங்கியது போலி பணிநியமன ஆணை என்பது தெரியவந்தது.
அதாவது 2 பேரும் பத்திர பதிவுத்துறை அலுவலக பணிக்கு போலி பணிநியமன ஆணை வழங்கி மோசடி செய்தது தெரியவந்தது. எனவே சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.