பெண்ணிடம் ரூ.70 லட்சம்-143 பவுன் மோசடி
ஆன்லைன் வியாபாரத்தில் பங்குதாரராக சேர்ப்பதாக கூறி பெண்ணிடம் ரூ.70 லட்சம், 143 பவுன் நகைகள் மோசடி செய்த 2 தம்பதிகள் கைது செய்யப்பட்டனர்.
ஆன்லைன் வியாபாரத்தில் பங்குதாரராக சேர்ப்பதாக கூறி பெண்ணிடம் ரூ.70 லட்சம், 143 பவுன் நகைகள் மோசடி செய்த 2 தம்பதிகள் கைது செய்யப்பட்டனர்.
ரூ.70 லட்சம், 143 பவுன் நகைகள் மோசடி
மதுரை அய்யர்பங்களா ஸ்ரீநகரை சேர்ந்தவர், டைட்டஸ் தம்பிநாதன். இவருடைய மனைவி சந்திரா (வயது 54). இவர் மதுரை மாநகர குற்றத்தடுப்பு பிரிவு போலீசில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது:-
சில மாதங்களுக்கு முன்பு மதுரை புதூர் மகாலட்சுமி நகரை சேர்ந்த பாத்திமா சமீம் (34), அவருடைய கணவர் ஜாகிர் உசேன் (40), பரமேசுவரி, அவரது கணவர் சுரேஷ் ஆகிய 4 பேர் அறிமுகம் ஆனார்கள். நாங்கள் ஆன்லைன் தொழில் செய்து வருகிறோம். அதில் நீங்கள் பங்குதாரராக சேர்ந்து முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என தெரிவித்தார்கள். அதை நம்பி நான் மற்றும் எனது உறவினர்கள் மூலம் ரூ.70 லட்சம் மற்றும் 143 பவுன் நகைகளை அவர்களிடம் கொடுத்தேன். அதன்பின்பு அவர்கள் 4 பேரும் பல மாதங்களாகியும் லாபத்தொகை தரவில்லை. எனவே நான் அவர்களிடம் கொடுத்த பணம், நகையை திருப்பி கேட்டேன். அப்போது அவர்கள், பணம், நகைக்கு ஈடாக ஆவணம் ஒன்றை கொடுத்தனர்.
2 தம்பதிகள் கைது
மேலும் உங்களது பணத்தை கூடிய விரைவில் திருப்பித் தருவோம் என்று கூறினார்கள். ஆனால் அவர்கள் தெரிவித்தப்படி பணம், நகையை தராமல் ஏமாற்றி வந்தனர். நான் தொடர்ந்து அவர்களிடம் கேட்டதால், 4 பேரும் கொலை மிரட்டல் விடுத்தனர். எனவே போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து ரூ.70 லட்சம், 143 பவுன் நகையை மீட்டு தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது, 4 பேரும் பணம், நகையை மோசடி செய்ததாக தெரியவந்தது. அதை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 தம்பதிகளை கைது செய்தனர்.