என்ஜினீயரிடம் ரூ.8 லட்சம் மோசடி
ஆன்லைனில் வேலை தருவதாக கூறி என்ஜினீயரிடம் ரூ.8 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை
ஆன்லைனில் வேலை தருவதாக கூறி என்ஜினீயரிடம் ரூ.8 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த மோசடி சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
என்ஜினீயர்
கோவையை அடுத்த கோவைப்புதூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 38). இவர் கோவையில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை செய்து வருகிறார். இவருக்கு ஆன்லைனில் பகுதி நேரமாக வேலை செய்ய விருப்பம் ஏற்பட்டது. இதற்காக அவர் ஆன்லைனில் தகுந்த வேலையை தேடியதாக தெரிகிறது.
இந்த நிலையில் கடந்த மாதம் இவருடைய செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி ஒன்று வந்தது. அதில் ஆன்லைனில் பகுதி நேர வேலை வேண்டும் என்றால் அதில் உள்ள லிங்கை அழுத்தவும் என்று கூறப்பட்டு இருந்தது. உடனே அவர் அந்த லிங்கை அழுத்தி உள்ளே சென்றபோது ரூ.1000 முன்பணம் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
ஆன்லைனில் வேலை
உடனே அவர் அந்த பணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தினார். பின்னர் சிறிது நேரத்தில் மணிகண்டன் செல்போனுக்கு ஒருவர்தொடர்பு கொண்டு பேசியதுடன், டெலிகிராமில் குரூப் தொடங்கப்பட்டு உள்ளது, அதில் உங்கள் எண்ணையும் இணைத்து உள்ளோம். உங்களுக்கு ஆன்லைனில் நல்ல வேலை இருக்கிறது.
உங்களுக்கு கொடுக்கப்படும் வேலை தொடர்பாக அந்த குரூப்பிலேயே தகவல் அனுப்பி வைக்கப்படும். அதை வைத்து நீங்கள் வேலை செய்தால் அதிகளவில் பணம் சம்பாதிக்கலாம் என்றும், அதற்காக நீங்கள் அவ்வப்போது பணமும் செலுத்த வேண்டும் என்றும் கூறினார்.
ரூ.8 லட்சம் மோசடி
அதை நம்பிய, மணிகண்டன் பல்வேறு தவணைகளாக ரூ.7 லட்சத்து 96 ஆயிரம் வரை செலுத்தினார். ஆனால் அவர்கள் கூறியபடி மணிகண்டனுக்கு வேலை கொடுக்கவில்லை. மேலும் அவர் செலுத்திய தொகைக்கான லாபத்தொகையோ அல்லது செலுத்திய பணத்தையோ திருப்பி கொடுக்கவில்லை.
அப்போதுதான் அவருக்கு அந்த நிறுவனம் போலி என்பதும், தனக்கு ஆன்லைனில் தகுந்த வேலை கொடுப்பதாக கூறி நூதன முறையில் பணம் பெற்று ஏமாற்றியதும் தெரியவந்தது.
இது தொடர்பாக மணிகண்டன், கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஏமாற வேண்டாம்
மேலும் இது குறித்து போலீசார் கூறும்போது, எந்த ஒரு வேலைக்கும் பணம்கேட்பது கிடையாது. எனவே யாராவது பணம் கொடுங்கள், வேலை கொடுக்கிறோம் என்று கூறினால் அது மோசடி செய்வதற்காகதான். எனவே வேலைக்காக யாராவது பணம் கேட்டால் கொடுத்து ஏமாற வேண்டாம். பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றனர்.