சுகாதார பணியாளர் வங்கி கணக்கில் ரூ.80 ஆயிரம் மோசடி
குறுஞ்செய்தி அனுப்பி சுகாதார பணியாளர் வங்கி கணக்கில் ரூ.80 ஆயிரம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் குறித்து ராமநாதபுரம் சைபர்கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் செம்படையார்குளம் அருகே உள்ளது வட்டான்வலசை. இந்த ஊரைச் சேர்ந்தவர் சொர்ணமுத்து மகன் சச்சின்டெண்டுல்கர் (வயது25). இவர் உச்சிப்புளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பல்நோக்கு சுகாதார பணியாளராக பணியாற்றி வருகிறார். இவர் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு தொடங்கி தனது சம்பள வரவு செலவு கணக்கினை பராமரித்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது செல்போன் எண்ணிற்கு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் வங்கி கணக்கினை மேம்படுத்தாமல் உள்ளதாகவும் பான்கார்டு உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்து வங்கி கணக்கினை புதுப்பித்து கொள்ளுமாறும் காலம் தாழ்த்தினால் வங்கி கணக்கு நிறுத்தம் செய்யப்படும் என்று கூறி ஒரு லிங்க் அனுப்பி உள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சச்சின்டெண்டுல்கர் உடனடியாக அந்த லிங்கிற்குள் சென்று அதில் கேட்கப்பட்ட சுயவிபரங்களை பதிவு செய்துள்ளார். தொடர்ந்து 3 முறை இவ்வாறு பதிவு செய்த நிலையில் அவரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.79 ஆயிரத்து 998 எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சச்சின் டெண்டுல்கர் தன்னிடம் குறுஞ்செய்தி அனுப்பி ஏமாற்றியதை உணர்ந்து உடனடியாக சைபர்கிரைம் போலீசில் புகார் செய்தார். ராமநாதபுரம் சைபர்கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல்ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் திபாகர் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.