திண்டிவனத்தில்தனியார் நிறுவனம் நடத்தி ரூ.85 கோடி மோசடி2 பேர் கைது; 6 பேருக்கு வலைவீச்சு


தினத்தந்தி 18 March 2023 12:15 AM IST (Updated: 18 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திண்டிவனத்தில் தனியார் நிறுவனம் நடத்தி ரூ.85 கோடி மோசடி செய்த சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 6 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விழுப்புரம்

தனியார் நிறுவனம்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சி அலுவலகம் அருகில் தனியார் மார்க்கெட்டிங் நிறுவனம் ஒன்று இயங்கி வந்தது. இந்நிறுவனத்தை திண்டிவனம் விநாயகபுரம் பகுதியை சேர்ந்த மாயகிருஷ்ணன் (45) என்பவர் நடத்தி வந்தார்.

இந்நிறுவனத்தில் ரூ.50 ஆயிரம் செலுத்தினால் 10 மாதம் கழித்து ரூ.90 ஆயிரமும், ரூ.1 லட்சம் செலுத்தினால் 10 மாதங்கள் கழித்து ரூ.1 லட்சத்து 80 ஆயிரமும், ரூ.2 லட்சம் செலுத்தினால் ரூ.3 லட்சத்து 60 ஆயிரமும், ரூ.5 லட்சம் செலுத்தினால் ரூ.9 லட்சமும், ரூ.10 லட்சம் செலுத்தினால் ரூ.18 லட்சமும், ரூ.20 லட்சம் செலுத்தினால் 10 மாதங்கள் கழித்து ரூ.36 லட்சமும் வழங்கப்படும் என்று அந்நிறுவனத்தினர் ஆசைவார்த்தை கூறினர்.

ரூ.85 கோடி மோசடி

இதனை நம்பிய திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகா வேளாந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த மண்ணுலிங்கம் (51) மற்றும் அவருக்கு தெரிந்த 8 பேர் சேர்ந்து கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மொத்தம் ரூ.55 லட்சத்தை செலுத்தியுள்ளனர். ஆனால் அவர்களுக்கு சேர வேண்டிய பணத்தை திருப்பித்தராமல் அந்நிறுவனத்தினர் காலம் தாழ்த்தி வந்துள்ளனர்.இந்த சூழலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்நிறுவனத்திற்கு சென்று பார்த்தபோது நிறுவனம் பூட்டப்பட்டிருந்தது. அங்கு இருந்தவர்கள் தலைமறைவாகியிருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட அவர்கள், விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் அந்நிறுவன நிர்வாக இயக்குனர்கள் மாயகிருஷ்ணன், மஞ்சுளா, மாயகிருஷ்ணன் மனைவி பிரபாவதி மற்றும் திண்டிவனம் பகுதியை சேர்ந்த கவுதம், மதிவாணன், முருகன், வீரமணி, செந்தில்குமார் ஆகிய 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

விசாரணையில் அவர்கள் 8 பேரும் சேர்ந்து, இதுபோன்று 7 ஆயிரம் பேரிடம் இருந்து ரூ.85 கோடி வரை பெற்றுக்கொண்டு திருப்பித்தராமல் ஏமாற்றி மோசடி செய்திருப்பது தெரியவந்தது.

2 பேர் கைது

இதையடுத்து மாயகிருஷ்ணன் உள்ளிட்ட 8 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று வீரமணி (46), செந்தில்குமார் (45) ஆகிய இருவரையும் மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சம்பத்குமார் தலைமையிலான போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். மாயகிருஷ்ணன் உள்ளிட்ட மற்ற 6 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story