தவணை முறையில் வீட்டு மனை தருவதாக கூறி பல லட்சம் மோசடி

தவணை முறையில் வீட்டு மனை தருவதாக கூறி பல லட்சம் மோசடி
கோவை
தவணை முறையில் வீட்டு மனை தருவதாக கூறி பல லட்சம் மோசடி செய்த ரியல் எஸ்டேட் அதிபர் மீது பொதுமக்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
வீட்டு மனை
கோவை ஆர்.எஸ்.புரம், கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் நேற்று கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-
கடந்த 2010-ம் ஆண்டு ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம் மாத தவணையில் பணத்தை செலுத்தினால் வீட்டு மனை கிடைக்கும் என்று அறிவித்தது. மேலும் காரமடை அருகே தேக்கம்பட்டி பகுதியில் இடம் இருப்பதாக கூறினர். தொடர்ந்து அந்த இடத்திற்கு எங்களை அழைத்து சென்று காண்பித்தனர்.
மோசடி
இதனை நம்பிய நாங்கள் மாதந்தோறும் தவணை முறையில் வீட்டு மனைக்கான பணத்தை செலுத்தி வந்தோம். கடந்த 2016-ம் ஆண்டு பெரும்பாலானோர் பணத்தை முழுவதுமாக செலுத்தி விட்டோம். இதையடுத்து வீட்டுமனையை கிரையம் செய்து தரும்படி சம்பந்தப்பட்ட ரியல்எஸ்டேட் நிறுவன அதிபரிடம் கூறினோம்.
அவரும் கிரையம் செய்து தருவதாக கூறி பலரிடம் கிரைய பத்திரத்திற்கான தொகையும் பெற்றுக்கொண்டார். ஆனால் அவர் கூறியபடி வீட்டுமனையை கிரையம் செய்து தரவில்லை. இதுகுறித்து நாங்கள் கேட்ட போது சம்பந்தப்பட்ட வீட்டு மனைக்கு அரசு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று தெரிவித்தார்.
இதையடுத்து நாங்கள் கட்டிய பணத்தை திருப்பி தரும்படி கேட்டோம். ஆனால் இதுவரை நாங்கள் கட்டிய பணம் எதையும் அவர் திருப்பி தராமல் மோசடி செய்து விட்டார். எங்களில் பலர் அவரிடம் ரூ.2 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை பணத்தை கட்டியுள்ளோம். இதற்கான ரசீது எங்களிடம் உள்ளது. எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை திரும்ப பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.